Last Updated : 27 Jan, 2017 04:18 PM

 

Published : 27 Jan 2017 04:18 PM
Last Updated : 27 Jan 2017 04:18 PM

சைக்கிள்களை வாடகைக்கு விடும் சென்னை மெட்ரோ

வாகன நெரிசலைக் குறைக்கவும், பசுமைக்கு மாறும் வகையிலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சைக்கிள்களை வாடகைக்கு அளிக்கத் தொடங்கியுள்ளது.

முதலில் சிறிய முயற்சியாக சென்னை மெட்ரோ ஈக்காட்டுத்தங்கல் ரயில் நிலையத்தில் 10 சைக்கிள்களோடு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் பயணிகள் 3000 ரூபாயைத் திரும்பப்பெறக் கூடிய பணமாகச் செலுத்த வேண்டும். அதேநேரம் அவர்கள் தினசரிக் கட்டணம் எதையும் செலுத்தத் தேவையில்லை. பயணிகள் இறங்கிய இடத்தில் இருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கும், அங்கிருந்து திரும்பவும் வரும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதி தினசரி பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில், மற்ற ரயில் நிலையங்களிலும் சைக்கிள்களை வாடகைக்கு விட சென்னை மெட்ரோ முடிவு செய்துள்ளது. அடுத்த 10 சைக்கிள்களுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே வேளையில் ரூ.3000 டெபாசிட் தொகை பொதுப் போக்குவரத்தைத் தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு அதிகமாக இருக்கும்.

இதற்குப் பதிலாக முந்தைய காலத்தில் இருந்தது போல, மணிக்கு இத்தனை ரூபாய் வாடகை என்று வசூலிக்கலாம் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நாராயணன் என்னும் பயணி பேசும்போது, ''எத்தனை பேரால் இவ்வளவு பெரிய தொகையை அளிக்கமுடியும் என்று தெரியவில்லை. சைக்கிள்கள் மணிநேரம் அடிப்படையில் வாடகைக்கு விடப்பட வேண்டும். அதேபோல இந்த முறையை அனைத்து ரயில் நிலையங்களிலும் அமல்படுத்த வேண்டும்'' என்றார்.

பெங்களூரு, டெல்லி முன்மாதிரிகள்

முன்னதாக வாடகை பைக்குகள் டெல்லி மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால் பெங்களூருவில் சில வாகனங்கள் களவு போனதால், தற்போது மணிநேரத்துக்கு வாடகைக்கு அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில், மெட்ரோ ரயில் வேலை முழுமை பெற்றபின்னர் எல்லா ரயில் நிலையங்களிலும் வாடகை சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்படுலாம் என்று திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x