Last Updated : 22 Sep, 2016 12:09 PM

 

Published : 22 Sep 2016 12:09 PM
Last Updated : 22 Sep 2016 12:09 PM

ஸ்மார்ட் சிட்டியாகும் வேலூர்: விடிவை நோக்கி நகருமா வெயில் நகரம்?

வளர்ந்த நாடுகளில் அனைத்து வசதிகளும் உடைய ‘ஹைடெக்’ நகரங்களைப் போல் 100 நகரங்களை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் நகரங்கள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து 2-ம் கட்ட பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப் பட்டது. இதில் தமிழகத்தில் எந்த நகரமும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பெறவில்லை.

இதற்கிடையே, 3-ம் கட்டமாக 63 நகரங்கள் போட்டியிட்டன. இதில் 27 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை அறிவித்தது. தமிழகத்தில் வேலூர், மதுரை, தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய 4 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுக்கப் போகும் நகரங்களில் உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பம், அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இருக்கும். தவிர, சர்வதேச நகரங்களுடன் ஒப்பிடும் வகையில் ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் சுத்தமான குடிநீர், தடையில்லா மின்சாரம், பளபளக்கும் சாலைகள், மின்னல் வேக இணையதள வசதி, தானியங்கி கழிவு அகற்றல், சிறப்பான பொது போக்குவரத்து, டிஜிட்டல் மயமான பொதுச் சேவைகள், குறைந்த விலையில் வீடு விற்பனை, திடக்கழிவு மேலாண்மை, பொது சுகாதார வசதிகள் மேம்படுத்துதல், நிலைத் தன்மையுடன் கூடிய சுற்றுச் சூழல், பெண்கள், குழந்தைகள், முதியவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தல், சீரிய நிர்வாகம், திறமையான நகர்புற இயக்கம், சீரான மின்சாரம், தடையின்றி குடிநீர் விநியோகம், மின்னாளுகை வசதி, வலிமையான தகவல் தொழில்நுட்ப இணைப்பு வசதி ஆகியவை ஸ்மார்ட் சிட்டி கட்டமைப்பின் முக்கிய அம்சங் களாகும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நகரத்துக்கும் மத்திய அரசு தன் பங்களிப்பாக ஆண்டுக்கு ரூ.100 கோடி என 5 ஆண்டு களுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்யும்.

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்றுவதில் பல சவால்கள் காத்திருக்கின்றன. இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டு மென்றால் குடியிருப்போர், தொழில் முனைவோர், அரசுத் துறை அலுவலர் கள் என பலரது ஒத்துழைப்பு தேவைப் படுகிறது. இதற்கான கால அவகாசமும் மக்களின் பங்களிப்பும் முழுமையாக இருந்தால் விரைவில் வேலூர் ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வேலூர் மாநகராட்சி ஆணையர் குமார் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘வேலூரை ஸ்மார்ட் சிட்டியாக்க 2 திட்டங்கள் வகைப் படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்று மேம்பாட்டு திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சியின் 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளான அலமேலுரங் காபுரம், சத்துவாச்சாரி, நீதிமன்றம், சைதாப்பேட்டை, சேண்பாக்கம், முள்ளிப்பாளையம், கொணவட்டம் உள்ளிட்ட பகுதிகள் (12 வார்டுகள்) ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப் படும்.

2-வது திட்டமான பரவலாக்கம் திட்டத்தின் கீழ், 60 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெரு மின்விளக்கு, தெருக்கால்வாய், சிமென்ட் சாலைகள், அனைத்து சாலைகளும் இணைப்பு, ‘பார்க்கிங்’ வசதியுடன் கூடிய வணிக வளாகங்கள், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுகாதாரமான மார்க்கெட் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும்.

இதற்கான செலவுத் தொகைக்கான கருத்துரு ஏற்கெனவே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்தபிறகு ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான பணிகள் விரைவில் தொடங்க பூர்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x