Published : 08 Oct 2013 02:27 PM
Last Updated : 08 Oct 2013 02:27 PM
தமிழகத்தில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் (SMART CLASS ROOM) என்ற புதிய தொழில்நுட்பத்தினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் 3,246 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான 48,247 வகுப்பறைகள் மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஒரு லட்சம் வகுப்பறைகள் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 247 வகுப்பறைகளுக்கும் தேசிய வரைபடம், தமிழ்நாடு வரைபடம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட வரைபடம் என மூன்று வரைபடங்கள் வாங்கி மாட்டுவதற்கு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக 11 கோடியே 56 லட்சத்து 32 ஆயிரத்து 660 ரூபாய் செலவிட தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கியுள்ளார்.
மாணாக்கர்களுக்கு கணினி வழியாக கல்வி கற்பித்து அவர்களின் புரிதல் திறனை மேம்படுத்தும் வகையில் SMART CLASS ROOM என்ற புதிய தொழில்நுட்பத்தினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் ஏற்கெனவே இருக்கும் வகுப்பறைகளில் ஏதேனும் ஒரு வகுப்பறை (20'x20') SMART CLASS ROOM ஆக மாற்றியமைக்கப்படும். இத்திட்டத்தின்படி கல்வி கற்பிக்க ஆர்வமுள்ள, இத்துறைப் பள்ளிகளில் ஏற்கெனவே பணிபுரியும் ஆசிரியர்களில், ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் SMART CLASS ROOM அமைப்பதற்கு தேவையான கணினி உள்ளிட்ட அறிவியல் சாதனங்கள் வாங்கிட ஒரு பள்ளிக்கு 5,05,000 ரூபாய் வீதம் 100 பள்ளிகளுக்கு 5 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT