Published : 28 Oct 2015 08:50 AM
Last Updated : 28 Oct 2015 08:50 AM
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் பங்கீட்டுக் குழுவை உடனே அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி பி.ஆர்.பாண்டியன் தலைமையி லான காவிரி விவசாயிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பி.ஆர். பாண்டியன் நேற்று தாக்கல் செய்துள்ள ரிட் மனு விவரம்: கடந்த 2007 பிப்ரவரி 5-ம் தேதி காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்தது. இந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு மத்திய அரசுக்கு 2013 பிப்ரவரி 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு கடந்த 2013 பிப்ரவரி 19-ம் தேதி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் கூறியபடி, காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டுக் குழுவை அமைக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2013 மார்ச் 18-ம் தேதி முறையிட்டது. இதையடுத்து, இடைக்கால ஏற்பாடாக மத்திய நீர்வளத் துறை செயலாளர் தலைமையில் மேற்பார்வைக் குழுவை அமைத்தது மத்திய அரசு. எனினும், உரிய பலன் கிடைக்கவில்லை.
உடனடியாக மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டுக் குழுவை அமைக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் கடந்த ஜூன் 12-ம் தேதி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேரில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு மத்திய நீர்வளத் துறை செயலகம் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி அளித்த பதிலில், கர்நாடகம் அளித்த நீர் விவரம் மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது. முக்கிய கோரிக்கைகளை தவிர்த்துவிட்டது. எனவேதான், உச்ச நீதிமன்றத்தை அணுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டுக் குழுவை அமைக்காமல் இருப்பதன் மூலம், மத்திய அரசு சட்டப்படியான தனது கடமையை செய்யத் தவறிவிட்டது. நடுவர் மன்றத் தீர்ப்புகூட, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர்தான் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. மத்திய அரசு தனது அரசியல் சாசன கடமையை நிறைவேற்றத் தவறியுள்ளது.
நடுவர் மன்றம் நிலை நிறுத்திய, தமிழக விவசாயிகளின் உரிமைகளை உறுதிப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது. இதனால், தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது. எனவே, உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டுக் குழுவை அமைப்பது மட்டுமே தமிழக விவசாயிகளுக்கு நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை செயல்படுத்தும் ஒரே வழியாகும்.
எனவே, உடனடியாக மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டுக் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த ரிட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT