Published : 15 Jun 2017 10:06 AM
Last Updated : 15 Jun 2017 10:06 AM
குன்னூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மூடப் பட்டு, ரேஷன் கடையாக மாறியுள் ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். மாணவர்களின் நலன் கருதி முதற்கட்டமாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் ரேங்கிங் முறை நடப்பாண்டு முதல் ரத்து செய்யப்பட்டது. அடுத்தாக, சிபிஎஸ்சி பாடத்திட்டத்துக்கு இணையாக மாநில அரசு கல்வியில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
பல மாற்றங்கள் அதிரடியாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்ற அறிவிப்பு, பள்ளி கல்வித் துறை மானிய கோரிக்கையில் இடம் பெறும் எனவும் பரவலாகப் பேசப்பட்டது.
பள்ளி கல்வித் துறையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் கல்வியில் பெரும் புரட்சி ஏற்பட்டதாக அதிமுகவினர் கொண்டாடி வரும் நிலையில், கல்வியாளர்களும் மாற்றங்களை வெகுவாக வரவேற்றனர். இதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த எதிர்பார்ப் புக்கு மாறாக நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள தொடக்கப் பள்ளி, மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
குன்னூர் அருகே கரிமொராஹட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50 மாணவர்கள் படித்து வந்தனர். இந்த பள்ளி, இந்த ஆண்டு திடீரென மூடப்பட்டுள்ளது. பள்ளியில் தற்போது ரேஷன் கடை இயங்கி வருவது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூரை சேர்ந்த எக்ஸ்நோரா அமைப்பின் தலைவர் ம.கண்ணன் கூறும்போது, ‘கரிமொராஹட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மூடப்பட்டு, பள்ளியில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்களை இடமாற்றம் செய்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். பள்ளிக் கட்டிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமானதால், அங்கு ரேஷன் கடை செயல்பட ஊராட்சி ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது.
பள்ளி கல்வித் துறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதால், அரசு பள்ளிகளின் தரம் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், குன்னூரில் பள்ளி மூடப் பட்டுள்ளது வேதனையளிக்கிறது’ என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக குன்னூர் உதவிக் கல்வி அலுவலர் ரா.கார்த்திக் கூறும்போது, ‘குன்னூர் கல்வி மாவட்டத்தின் கீழ் உள்ள ஒடையரட்டி, வெலிங்டன், கரிமொராஹட்டி, மேல் ஓடையரட்டி ஆகிய தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இரு ஆசிரியர் பள்ளிகள். இந்த பள்ளி ஆசிரியர்கள் தேவையான இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பள்ளிகளுக்கான ஆசிரியர் ஒதுக்கீடு அப்படியே உள்ளது. பள்ளிகளை திறக்க அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தால், மீண்டும் திறக்கப்படும், ஆசிரியர்களும் பணியமர்த்தப்படுவார்கள்’ என்றார்.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறும்போது, ‘பள்ளிக் கட்டிடம் ஒன்றியத்துக்கு சொந்தமானது. பள்ளி மூடப்பட்டதால், ரேஷன் கடை நடத்தப்படுகிறது. கட்டிடம் மீண்டும் பள்ளிக்கு தேவைப்படும் பட்சத்தில் ரேஷன் கடை மாற்றப்படும்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT