Published : 03 Jul 2015 04:34 PM
Last Updated : 03 Jul 2015 04:34 PM

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப தயார்: தமிழக அரசிடம் அனுமதி கேட்கும் விஜயகாந்த்

"தமிழக அரசுக்கு நிதி வசதி இல்லையென்றால், நான் பங்குதாரராக இருக்கின்ற கேப்டன் தொலைகாட்சி, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராக இருக்கிறது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்குமா?" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவைம் கூடும் நாட்களில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளும், பிற நாட்களில் திட்டங்களை துவக்கினார், திறப்புவிழா செய்தார் என பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் தினந்தோறும் செய்திகளை வரவழைத்து, இந்த அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விளம்பரம் செய்வதாகவே மக்கள் கருதுகிறார்கள்.

உண்மையாகவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளனவா? மக்களுக்கு அந்த திட்டங்களின் பலன் முழுமையாக சென்றுள்ளதா? என ஆய்வு செய்தால் பூஜ்ஜியமே விடையாகும்.

அதிமுக அரசு 2011-ல் பதவி ஏற்கும்போது ரூபாய் 1 லட்சம் கோடியாக கடன் இருந்தது. ஆனால் தற்போது 4 ஆண்டுகளில் ரூபாய் 2 லட்சம் கோடிக்கும் அதிகமாக கடன்தொகை உயர்ந்துள்ளது. மேலும் அரசு போக்குவரத்து துறையிலும், மின்வாரியத்திலும் 2 லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆக மொத்தத்தில் 4 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் சிக்கித்தவிப்பதை மறைத்திடவும், இந்த அரசு திவாலாகி உள்ளதை மறைக்கவுமே தமிழக முதல்வர் ஜெயலலிதா இதுபோன்று செய்து வருகிறார் என மக்கள் கூறுகிறார்கள்.

தமிழக அரசு திவாலாகி போனதா?

தமிழக அரசு திவாலாகிபோய் உள்ளதை நிரூபிக்கும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு நேரடி ஒளிபரப்புசெய்ய நிதி வசதி இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

எதற்கெடுத்தாலும் பல கோடி ரூபாயில் திட்டங்களை செயல்படுத்துகிறேன் என்று கூறும் தமிழக அரசு, நேரடி ஒளிபரப்பு செய்ய நிதி இல்லை என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?

சில லட்சங்களை செலவு செய்தாலே நேரடி ஒளிபரப்பு செய்யமுடியும், அதை கூட செய்யாத இந்த அரசை திவாலான அரசு என்று கூறலாமா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அரசுக்கு நிதி வசதி இல்லையென்றால் நான் பங்குதாரராக இருக்கின்ற கேப்டன் தொலைகாட்சி சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்புசெய்ய தயாராக இருக்கிறது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்குமா?

நிதி வசதி இல்லை என்று தானே சொன்னீர்கள், எனக்கு நிதி வேண்டாம், நீதி வென்றால் போதும். சட்டப்பேரவைத்தில் நடைபெறும் விவாதங்களையும், பல்வேறு நிகழ்வுகளையும் நடுநிலையோடு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், பொதுவான முறையில் அனைத்தையும் ஒளிபரப்பியிருந்தால் இந்த கேள்விகே இடம் இருந்திருக்காது.

பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை, மற்றும் பிற மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதுபோல், தமிழகத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என 2007ஆம் ஆண்டிலேயே முதன்முதலாக குரல் கொடுத்தது நான்தான். அப்போதுதான் ஆளும் கட்சியினர் செய்யும் அராஜகம், அத்துமீறல் போன்றவையும், யார் தவறு செய்துள்ளனர் என்பதும் மக்களுக்கு நன்கு தெரியவரும். எனவே உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் இப்பிரச்சனையில் உரிய நீதியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தமிழக மக்களுக்கு செய்யவேண்டிய நல்ல பல விஷயங்கள் எவ்வளவோ உள்ளது. உலக நாடுகளிடம் கடன் வாங்கி உருவாக்கப்பட்ட மெட்ரோ இரயில் திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு சமஉரிமை உள்ளது.

மக்கள் வரிப்பணத்தினால்தான் இந்த கடனை கட்டவேண்டும். அதையெல்லாம் மறந்துவிட்டு, இது என் ஆட்சியில் வந்தது, உன் ஆட்சியில் வந்தது என அரசியல் செய்யாமல், மக்கள் தலைமீது இந்த கடனை திரும்ப செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொது மக்கள் கூறுவது ஆட்சியாளர்களின் காதில் விழுகிறதா? இல்லையா?" என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x