Published : 01 Oct 2013 09:40 AM
Last Updated : 01 Oct 2013 09:40 AM
தமிழகத்தில் நடைபெறவுள்ள ஏற்காடு இடைத்தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
தேர்தல் சீர்திருத்தம்
தேர்தலில் வாக்குகளைச் செலுத்தும் வாக்காளர்களுக்கு, தாங்கள் நினைத்த நபருக்கு சரியாக வாக்கினைச் செலுத்தினோமா என்ற சந்தேகம் ஏற்படுவதுண்டு. இதைப் போக்கும் வகையில், வாக்களிப்போருக்கு, அவர்கள் செலுத்திய வாக்கை சரிபார்த்துக் கொள்ளும் வகையில் ஒப்புகைச் சீட்டு அளிக்கும் முறையை அமல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல் போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
‘‘வோட்டர் வெரிபையபிள் பேப்பர் ஆடிட் டிரையல் சிஸ்டம்’’ எனப்படும் இந்த இயந்திரங்களை வரும் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாக்கைச் செலுத்தியதும் இந்த இயந்திரங்களில் நாம் வாக்கு செலுத்திய வரிசை எண் ஒளிரும். உடனே, அதைக் குறிக்கும் வகையில் ரசீதும் வெளியே வரும். அதை வாக்கு செலுத்துபவர் எடுத்துக் கொள்ளலாம்.
நாகாலாந்து இடைத்தேர்தல்
நாட்டில் பல்வேறு சீதோஷ்ண நிலை நிலவும் 5 வெவ்வேறு பகுதி களில் இக்கருவிகள் சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப் பட்டன. மேலும், நாகாலாந்தில் கடந்த 4-ம் தேதி நடைபெற்ற நோக்சென் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் முதல் முறையாக இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லி அதிகாரி தகவல்
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நடைபெறவுள்ள ஏற்காடு இடைத்தேர்தலிலும் இந்த இயந்திரங்களை பயன்படுத்தலாமா என்று தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இது குறித்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய உயர் அதிகாரி ஒருவர், 'தி இந்து' நிருபரிடம் தொலைபேசியில் திங்கள்கிழமை கூறுகையில், ‘நாகாலாந்தில் செய்தது போல், தமிழகத்தில் ஏற்காடு இடைத்தேர்தலிலும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச் சீட்டு அளிக்கும் இந்திரங்களை அறிமுகப்படுத்தலாமா என்று ஆலோசித்து வருகிறோம். இது குறித்த அறிவிப்பு ஒரு சில நாள்களில் வெளியாகும்’ என்று தெரிவித்தார்.
இத்திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த 13 லட்சம் இயந்திரங்கள், ரூ.1692 கோடியில் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT