Published : 22 Mar 2014 02:37 PM
Last Updated : 22 Mar 2014 02:37 PM
மத்தியில் பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைத்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, மாநிலத்தில் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால்தான், தமிழகத்துக்கு உரிய பலன் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
மதிமுக தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது:
"நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று, மத்தியில் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் பேசி, மிகப் பெரிய அணியாக, இந்தக் கூட்டணி உடன்பாடு வருவதற்கு பாடுபட்டவர் தமிழருவி மணியன்.
பாஜக, தேமுதிக மற்றும் பாமக இந்தக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். மோடி அலை வீசும் நேரத்தில், தமிழகத்தில் இந்த அணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அணி அமைய விரும்பினேன். அப்படிப்பட்ட அணி அமைந்து, ராஜ்நாத் சிங் கடந்த 20 ஆம் தேதி அறிவித்தபோது, நான் எல்லையற்ற மகிழ்ச்சிக்கு ஆளானேன்.
விருதுநகரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, "இந்த தேர்தல் களத்தில் பல கட்சிகள் போட்டியிடும். பல கட்சியினர் ஓட்டு கேட்பார்கள். அவர்களுக்கு நீங்கள் ஓட்டு போடுவதினால் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. நீங்கள் ஓட்டுப் போடுவதினால் அவர்கள் ஜெயிக்கப்போவதும் இல்லை. உங்கள் ஓட்டு வீணாகி விடக் கூடாது" என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசும்போது கூறியுள்ளார்.
அவர் இந்தக் கருத்தை சொல்ல பரிபூரண உரிமையும், சுதந்திரமும் உண்டு. நான் அதை விமர்சிக்கவில்லை. நான் கூட 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று சொல்கிறேன். அதையே, அவர்கள் சொல்லுகிற வார்த்தையில் நாங்கள் சொல்ல வேண்டுமென்றால், 40 தொகுதிகளிலும் அவர்கள் தோற்பார்கள் என்றுதான் அர்த்தம்.
எப்படியும் மற்ற மாநிலங்களிலேயே பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து விடும். அதேநேரத்தில், தமிழகத்திலும் பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றால்தான், தமிழகத்துக்கு உரிய பலன் கிடைக்கும்.
ஈழத்தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்புதான் தீர்வு என்று, பல ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தினேன். தற்போது அனைத்து தலைவர்களும் இதைத் தான் வலியுறுத்துகின்றனர்.
'பெடரல் இந்தியா' என்ற எங்களின் இந்திய ஐக்கிய நாடுகள் கொள்கையை நரேந்திர மோடியோ அல்லது கூட்டணிக் கட்சிகளோ ஏற்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு. நாங்கள் எங்கள் கொள்கையை வலியுறுத்துவோம்" என்றார் வைகோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT