Published : 31 Mar 2017 11:16 AM
Last Updated : 31 Mar 2017 11:16 AM
மதுரை மாநகராட்சி லாரி குடிநீர் விநியோகம் செய்வதில் லாரி டிரைவர்கள், குடிநீர் விநியோகம் செய்வதற்கு பொதுமக்களிடம் ஒரு வீட்டிற்கு ரூ.10 தரச்சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், கொடுக் காதபட்சத்தில் பாரபட்சமாக குடிநீர் விநியோகம் செய்வதாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் வைகை அணை கூட்டுக்குடிநீர் திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் கிடைக்கும் நீர் ஆதாரத்தை கொண்டு 100 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. போதிய மழையில்லாததால் மதுரை மாநகராட்சியில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு 220 எம்எல்டி குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது 90 எம்எல்டி முதல் 75 எம்எல்டி வரையே குடிநீர் கிடைப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பெய்த கோடை மழையால் வைகை அணை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 60 முதல் 80 எம்எல்டி குடிநீரும், காவிரியில் 10 எம்எல்டி குடிநீரும் கிடைக்கிறது.
குடிநீர் பற்றாக் குறையை சமாளிக்க 100 வார்டுகளிலும் தட்டுப்பாடுள்ள பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் 50 லாரிகள், 20 டிராக்டர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்கிறது. ஒரு லாரியில் 10 ஆயிரத்து 100 லிட்டர் குடிநீர் நிரப்பப்பட்டு ஒரு தெருவுக்கு 4 நாளுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படுகிறது. இதில் ஒரு தெருவுக்கு 3 அல்லது 4 இடங்களில் லாரி நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் லாரி டிரைவர்கள் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறிய தாவது: லாரி டிரைவர்கள்தான், குடங்களில் தண்ணீர் திறந்து விடுகின்றனர். அப்போது அவர்கள், எங்கு நிறுத்தப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதோ அப்பகுதியில் வசிப்பவர்களிடம் ஒரு வீட்டிற்கு 10 ரூபாய் வீதம் வசூல் செய்து கொடுக்க கட்டாயப்படுத்துகிறார்கள். பணம் கொடுக்கும் பகுதிக்கு மட்டுமே நீண்ட நேரம் நின்று குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கொடுக்காதபட்சத்தில் மறுமுறை வரும்போது அந்த இடங்களில் குடிநீர் விநியோகம் செய்வதில்லை முக்கிய அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் இருக்கும் பகுதியிலும் கூடுதல் நேரம் நின்று குடிநீர் விநியோகம் செய்கின்றனர். அதனால் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து அவர்கள் மேற்பார்வையில் இந்த குடிநீர் விநியோகத்தை செய்தால் நலமாக இருக்கும் என்றனர்.
இதுகுறித்து குடிநீர் விநியோகம் செய்யும் லாரி டிரைவர் ஒருவரிடம் கேட்டபோது: டீ குடிக்க 10 ரூபாய் கேட்போம், கொடுத்தால் வாங்கிக் கொள்வோம். யாரையும் கட்டா யப்படுத்தமாட்டோம். அதற்காக குடிநீர் விநியோகம் பாரபட்சம் காட்டு வதில்லை என்றனர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது பணம் வாங்கும் லாரி டிரைவர் குறித்து புகார் செய்ய தொலைபேசி எண், வாட்ஸ் அப் எண் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
குழாயில் குடிநீர் வருவதே இல்லை..!
வீட்டுக் குழாய்களில் தானாக குடிநீர் விழும் வகையில் விநியோகம் செய்வதற்கே மாநகராட்சி மாதந்தோறும் குடிநீர் கட்டணம் வசூல் செய்கிறது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் பற்றாக்குறையால் பெரும்பான்மையான பகுதிகளில் வீட்டுக் குழாய்களில் குடிநீர் தானாக விழுவதே இல்லை. அடிபம்புகளை அடித்து குடிநீர் பிடிக்கின்றனர். சிலர் மின்மோட்டார்களை கொண்டு சட்டத்திற்கு புறம்பாக தண்ணீரை உறிஞ்சுகின்றனர். வீட்டுக்குழாயில் தானாக குடிநீர் விழுவதற்கு மாநகராட்சி தற்போது வரை தீர்வு காண முயற்சிக்கவே இல்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT