Published : 28 Oct 2014 08:59 AM
Last Updated : 28 Oct 2014 08:59 AM
காங்கிரஸின் முக்கிய தலைவரான முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், தனது சுய சரிதை உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுத உள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வில்லை. தனக்கு பதிலாக மகன் கார்த்தி ப.சிதம்பரத்தை சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக்கி, அவருக்காக தீவிர பிரச்சாரம் செய்தபோதும் கார்த்தி சிதம்பரம் தோல்வியடைந்தார்.
காங்கிரஸில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை முன்னிலைப் படுத்தவும், தனது அணியை வலுவாக்கவும் அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதேநேரம், தனக்கு வயதாகி விட்டதால், இலக்கியம், எழுத்து, சமூக நலப் பணிகள் போன்றவற்றில் தீவிரம் காட்ட, ப.சிதம்பரம் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் கூறியதாவது: கடந்த 1945ல் பிறந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு 70 வயதாகி விட்டது. அதனால் அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு செய்துள்ளார். அதேநேரம், எழுத்துலகில், இலக்கியப் பணிகள், சமூக சேவைப் பணி களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதற்காக அவர் ‘எழுத்து’ என்ற அறக்கட்டளை அமைப்பை தொடங்கியுள்ளார். இதன் அறங் காவலர்களாக ப.சிதம்பரம், பிரபல எழுத்தாளர்கள் அவ்வை நடராஜன், மரபின் மைந்தன் முத்தையா, கவிஞர் வைரமுத்து, மேத்தா ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
எழுத்து அமைப்பின் முதல் அறிமுக விழா, சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள சிவகாமி பெத்தாச்சி அரங்கில் வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் எழுத்து அமைப்பின் அறங்காவலர்களுடன், பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த அமைப்பின் மூலம் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிடவும் ப.சிதம்பரம் திட்ட மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனது அரசியல் வாழ்க்கை, பொருளாதார அனுபவங்கள், டெல்லி அரசியலின் முக்கிய சம்பவங்கள், திமுக, அதிமுக வுடனான காங்கிரஸின் உறவுகள், பட்ஜெட் தயாரித்த விதம், நிதியமைச்சகத்தின் பல்வேறு முக்கிய சம்பவங்கள், மற்ற மாநிலங்களின் செயல்பாடுகள், மும்பை தாக்குதல் சம்பவம் குறித்த பல்வேறு விஷயங்கள், அலைக்கற்றை ஒதுக்கீட்டின் விதிகள் போன்றவற்றை அவர் புத்தகமாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT