Published : 05 Dec 2013 12:00 AM
Last Updated : 05 Dec 2013 12:00 AM
மத்திய சிறைச்சாலை இருந்த இடத்தில் ரூ.60 கோடியில் கட்டப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டிடத்தில், முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் வகுப்புகள் புதன்கிழமை செயல்படத் தொடங்கியது.
சென்னை சென்ட்ரல் எதிரே இருந்த மிகப் பழமையான மத்திய சிறைச்சாலை, சில ஆண்டுகளுக்கு முன்பு புழலுக்கு மாற்றப்பட்டது. பழைய சிறைச்சாலை இருந்த இடம், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (எம்எம்சி) ஒதுக்கப்பட்டது. அங்கு 10 ஏக்கரில் ரூ.60 கோடி செலவில் 6 மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
8 மாதமாக…
கடந்த மார்ச் மாதம், இந்தக் கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். ஆனால், தண்ணீர் மற்றும் மின் இணைப்பு கிடைக்காததாலும் வகுப்பறைகளுக்கு தேவையான டேபிள், சேர்கள் வராததாலும் கடந்த 8 மாதங்களாக இந்தக் கட்டிடம் செயல்படாமல் இருந்தது. இந்நிலையில், புதிய கட்டிடத்தின் தரைதளத்தில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்புகள் புதன்கிழமை காலை தொடங்கின. சென்னை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் 142 மாணவர்கள், 108 மாணவிகள் என 250 பேர் வகுப்புக்கு வந்தனர்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) வி.கனகசபை ஆகியோர் வகுப்புகளை பார்வையிட்டனர்.
இடப் பற்றாக்குறை
புதிய கட்டிடத்தில் உள்ள வசதிகள் குறித்து டீன் கனகசபை கூறியதாவது:
சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இடங்கள், 165-ல் இருந்து 250 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன. இதனால், கல்லூரியில் இடப்பற்றாக்குறை நிலவியது. புதிய கட்டிடத்தின் தரைதளத்தில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான உடற்கூறுயியல், உயிர் வேதியியல் மற்றும் பிசியோதெரபி ஆகிய 3 துறைகள் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.
இங்கு மாணவர்களுக்கு வகுப்புகள் மட்டும் எடுக்கப்படும். செய்முறை பயிற்சிகள் எல்லாம் பழைய கட்டிடத்திலேயே நடக்கும். பெரிய தேர்வுக்கூடம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மருந்தாக்கயியல், நோய் கண்டறிதல், மைக்ரோ பயாலஜி, சட்டம் சார்ந்த மருத்துவம், சமூக மருத்துவம் போன்ற துறைகளும் படிப்படியாக புதிய கட்டிடத்தில் செயல்படத் தொடங்கும். முதல் தளத்தில் நூலகமும், 6-வது தளத்தில் மிகப்பெரிய தேர்வுக் கூடமும் அமைக்கப்பட்டு வருகிறது.
தரைதளத்தில் மாணவர்களுக்கு உணவகம் மற்றும் ஓய்வு அறைகள் அமைக்கப்படும். மேலும் 8 துறைகளுக்கான விரிவுரையாளர் அறைகள், 8 பரிசோதனைக் கூடங்கள் மற்றும் செயல் விளக்க அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2-வது தளத்தில் கல்லூரி முதல்வர் அறை செயல்படும்.
இந்தக் கட்டிடம் நவீன தொழில்நுட்பத்துடன் அறைகளில் தூண்கள் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும் 43 ஆயிரம் சதுர அடி கொண்டது.
ரூ.20 கோடியில் விடுதி
இந்த வளாகத்தில் ரூ.20 கோடி செலவில் 450 மாணவிகள் தங்குவதற்கான விடுதி கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 150 அறைகள் கொண்ட 4 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT