Published : 15 Mar 2017 09:59 AM
Last Updated : 15 Mar 2017 09:59 AM
காஞ்சிபுரம் மாவட்டம், திருப் போரூர் ஒன்றியம் இள்ளளூரில் இருக்கிறது பெரிய ஏரி. கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென ஒரு நாள் இந்த ஏரியில் ஏராளமான பொக்லைன் இயந்திரங்கள் குவிக்கப் பட்டன. மக்கள் என்ன ஏது என்று விசாரிப்பதற்குள் இயந்திரக் கரங்கள் ஏரியைத் தோண்டத் தொடங்கின. லாரி லாரியாக ஏரி மண் வெளியே செல்லத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் மக்கள் லாரிகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர். இன்னொரு பக்கம் மண் எடுப்பவர்கள் உள்ளூர் பிரமுகர்களிடம் ஊர்க் கோயிலுக்கு சில லட்சங்கள் பணம் தருவதாக பேரம் பேசினார்கள்.
நீண்ட போராட்டத்துகுப் பிறகு அதிகாரிகள் அறிவிப்பாணை ஒன்றை மக்களிடம் அளித்தார்கள். அதில் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் ஏரியில் இருந்து சுமார் 4 ஆயிரம் லாரி லோடு மண்ணை அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. மேலும் அந்த உத்தரவில் முந்தைய ஆண்டு பெய்த மழையில் கரை உடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப் படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஏரிக்குள் ஆக்கிர மிப்புகள் எதுவும் இல்லை, கரையும் உடையவில்லை. உண்மையில் இதன் பின்னணி என்ன தெரியுமா?
கடந்த 2016-ம் ஆண்டு சென் னையைப் புரட்டிப்போட்ட வெள் ளத்தை யாரும் மறந்திருக்க முடியாது. வெள்ளம் சென்னையை மட்டும் புரட்டிப் போடவில்லை. சென்னையின் ரியல் எஸ்டேட் தொழிலையும் அதள பாதாளத்துக்குள் புரட்டிப்போட்டது. தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளம் வந்துவிடும் என்று காரணம் சொல்லி பெரும்பாலோனோர் வீடு, நிலம் வாங்கவில்லை. இதனால், சரிந்துபோன தங்களது தொழிலை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயம் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. அதற்கு பள்ளமான பகுதி களை எல்லாம் மேடாக்க வேண்டும்.
ஏற்கெனவே பள்ளமான பகுதிகளில் கட்டிய கட்டிடங்களைச் சுற்றி மண் மேடுகளை அமைக்க வேண்டும். இதற்கு எல்லாம் ஏராளமான மண், சவுடு, கிராவல் தேவைப்பட்டது. அவை ஏரிகளில் இருந்தன. ஏரி மண்ணுக்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டது. போட்டி போட்டுக்கொண்டு ஏரிகளின் மண்ணை விலைக்கு வாங்கினார்கள். இள்ளளூரில் மண் அள்ளியதன் பின்னணியும் இதுவே. ஆனால், மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தியதால் அங்கு மண் எடுப்பது பாதியில் நிறுத்தப்பட்டது.
தமிழக அரசு கடந்த 97-ம் ஆண்டு நீர்நிலைகளில் சிறு கனிமங்கள் (ஆற்று மணல் மற்றும் கிரானைட் தவிர்த்து) எடுப்பதை முறைப்படுத்தவும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் நீண்ட ஆய்வை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 98-ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
அதன் சாராம்சம் இதுதான்: தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள், குளம், குட்டை, கண்மாய்களில் விதி முறைகள் மீறி ஏராளமான மண், சவடு, கிராவல் உள்ளிட்ட சிறு கனிமங் கள் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதனால், தமிழ்நாடு சிறு கனிமங்கள் சலுகை சட்டம் 1959-ஐ மேலும் பலப்படுத்தும் வகையில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டோம்.
இதில் நீர்நிலைகளில் சிறு கனிமங்களை எடுப்பதை முறைப் படுத்த வேண்டும் எனில் ஏராளமான நிதியும் கூடுதலாக பணியாளர்களும் தேவை என்பது புரிந்தது. எனவே, மேற்கண்ட நிர்வாகத்தை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க மாநில அரசு சில கொள்கை முடிவுகள் எடுக்கிறது.
அதன்படி ஊராட்சிகள், ஒன்றியங் கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்பின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களே தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் நீர் நிலைகளில் மண் அள்ளுவது குறித்து தீர்மானிக்க அதிகாரம் பெற்ற வர்களாவர். எந்தெந்த ஏரிகளில் மண் அள்ளுவது, எவ்வளவு மண் அள்ளுவது என்பது குறித்து உள்ளாட்சி அமைப்புகளே மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட நீர் நிலைகளில் மாவட்ட ஆட்சியர் மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மூன்று மாதங்களுக்குள் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அல்லது கனிம வளத்துறை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் பரிந் துரைக்கும் நீர்நிலைகளில் மண், சவுடு, கிராவல் உள்ளிட்டவை அள்ளுவது தொடர்பாக உரிமத் தொகை (seigniorage fee) நிர்ணயிப்பது, ஒப்பந்தம் கோருவது, ஏலம் விடுவது, ஒப்பந்தம், ஏலத் தொகையை இறுதி செய்வது ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் மேற்கொள்வர். இவை பற்றிய விவரங்கள் உள்ளாட்சி அமைப்பு களிடம் உடனுக்குடன் தெரிவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் கிடைக்கப் பெறும் ஏலத் தொகை வருவாயை ஒன்றியங்கள் மற்றும் அவை சார்ந்த ஊராட்சி அமைப்புகள் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் உரிமக் கட்டணம் எந்த ஊராட்சியில் சம்பந்தப்பட்ட நீர்நிலை அமைந்திருக்கிறதோ அந்த ஊராட்சிக்கு மட்டுமே சொந்தமாகும்.
நீர் நிலைகளில் சட்டவிரோதமாக மண் அள்ளுவது தெரிந்தால் உள்ளாட்சி அமைப்புகள் 48 மணி நேரத்துக்குள் மாவட்ட வருவாய் அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், சட்ட விரோதமாக மண் அள்ளுவதைத் தடுக்கவும், அதற்கான வாகனங்களை பறிமுதல் செய்யவும் உள்ளாட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் அளிக்கப் படுகிறது. சட்ட விரோதமாக மண் அள்ளியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அபராதத் தொகை விதிக்க வேண்டும். அந்த அபராதத் தொகை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். மேற் கண்ட நடவடிக்கைகளை மேற்கொள் வது தொடர்பாக தமிழ்நாடு பஞ்சாயத் துக்கள் சட்டம் 1994-ன் படி உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் சபையைக் கூட்டி தொடர் ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுதான் அந்த அரசாணையின் சுருக்கமான சாராம்சம். இன்னும் நுட்பமான விதிமுறைகள் எல்லாம் இருக்கின்றன. சொல்லப்போனால் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்தில் ஒரு நீர்நிலையில்கூட அதிகாரிகள் கையை வைக்க முடியாது. நீர் நிலைகள் மட்டும் அல்ல; கல் குவாரிகளின் மீதான அதிகாரங்களும் உள்ளாட்சி அமைப்புகளிடமே இருக்கின்றன.
இன்று ஒவ்வொரு நீர்நிலையில் இருந்தும், கல் குவாரியில் இருந்தும் வெளியேறும் ஒவ்வொறு லாரி மண்ணுக்கும் கல்லுக்கும் ‘டிரிப் ஷீட்’-ல் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் கையெழுத்து வேண்டும். ஒரு நாளைக்கு 2 ஆயிரம் லாரிகள் வெளியேறுகிறது எனில் அத்தனையிலும் அவர்களது கையெழுத்து தேவை. சாதாரணமானது அல்ல உள்ளாட்சி பிரதிநிதிகளின் அதிகாரமும், பணிகளும். ஆனால், உண்மையில் இங்கே நடப்பது என்ன? அத்தனையும் அதிர்ச்சியடைய வைக்கும் விஷயங்கள்!
- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT