Published : 26 Dec 2013 09:56 AM
Last Updated : 26 Dec 2013 09:56 AM
உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத், பத்ரிநாத் திருத்தலங்களுக்கு தமிழகத்தில் இருந்து சென்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இறந்த 14 யாத்திரிகர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.98 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத் திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற தமிழக பக்தர்கள் அங்கு பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தமிழகம் திரும்ப முடியாமல் தவித்தனர். இதில் 657 தமிழக பக்தர்கள் மீட்கப்பட்டு, அரசின் செலவிலேயே அவர்களது சொந்த ஊருக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஆனால், அங்கு காணாமல்போன 14 பக்தர்களின் தடயங்களை அறிய முடியவில்லை.
வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி நிவாரணத் தொகை வழங்கியதோடு, இந்தப் பேரழிவில் காணாமல் போன 14 பக்தர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3.50 லட்சம் வீதம் 49 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
மேலும், இந்த பக்தர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், உத்தரகண்ட் மாநில அரசு சார்பில் தலா ரூ.1.50 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று நிதியுதவிகளையும் சேர்த்து ஒரு குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் வீதம் மொத்தம் ரூ.98 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வழங்கினார். அப்போது, பக்தர்களது குடும்பத்தினர் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இவ்வாறு அரசுக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT