Published : 21 Feb 2017 06:50 PM
Last Updated : 21 Feb 2017 06:50 PM
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ளது ஈஷா யோகா மையம். இங்கு ஏற்கெனவே தியான லிங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு பிரபலமாக உள்ளது. இதற்கு இந்தியா முழுவதிலிருந்து மட்டுமல்ல; உலகெங்குமிருந்தும் யோகா, தியான பிரியர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அதிலும் ஆண்டுதோறும் சிவராத்திரியன்று இங்கு கூடும் கூட்டத்திற்கு அளவே இருக்காது. தற்போது வரும் 24-ம் தேதி சிவராத்திரியன்று 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிவனின் திருமுகச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த சிலை திறப்பு விழாவுக்கு அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வர உள்ளார். கோவை மாவட்டம் போலாம்பட்டி வனச் சரகத்திற்குட்பட்ட அடர்ந்த காடுகளுக்குள் அமைந்துள்ள ஈஷா மையத்திற்கு ஏற்கெனவே ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்கான ஹெலிபேட் தளம் உள்ளது. தற்போது ஆதியோசி சிலை அமைந்திருக்கும் அருகிலேயே பிரதமர் வந்து இறங்குவதற்காக புதியதாக ஹெலிபேடு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
(பிரதமர் வருகைக்காக பூண்டி சாலையில் வேகத்தடைகள் பொக்லைன் மூலம் அகற்றப்படுகிறது)
மோடி வந்திறங்குவது ஹெலிகாப்டர் மூலம் என்றாலும் கூட, அவர் வருகையை முன்னிட்டு பல்வேறு மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மத்திய, மாநில உயர் அதிகாரிகள், விஐபிக்கள் வருவார்கள் என்பதால் கோவையிலிருந்து ஈஷா மையம் வரையுள்ள சாலை போக்குவரத்து துரிதமாக இருப்பதற்கு ஏற்ப புதுப்பிக்கப்படுகிறது.
சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவு உள்ள இச்சாலை வழியே செல்வபுரம், தெலுங்குபாளையம், பேரூர், செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, பூலுவப்பட்டி, ஆலாந்துறை, தொம்பிலிபாளையம், இருட்டுப்பள்ளம், செம்மேடு, இக்கரை போலாம்பட்டி என ஏகப்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கெல்லாம் விபத்துகளை தடுக்க சாலையில் ஏராளமான வேகத்தடைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 50க்கும் மேற்பட்ட வேகத்தடைகளை நேற்று முன்தினம் முதல் அகற்றி சேதப்பட்ட அந்த இடத்தில் தார்ச் சாலையை சீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளனர் அதிகாரிகள். பிரதமர் வந்திறங்கும் பகுதி பூண்டி, வெள்ளியங்கிரி மலை பகுதிகள் ஏற்கெனவே மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதியாக அதிரடிப்படையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஈஷா மையத்திற்கு 1 கி.மீ. தொலைவில் இதற்கு நுழைவுவாயில் முள்ளாங்காடு வனத்துறை சோதனைச் சாவடியில் 6 மாதங்களுக்கு முன்பே மாவோயிஸ்ட்டுகள் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் குறித்த அறிவிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் வரும் வாகனங்கள் எல்லாம் சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
ஆதியோகி சிலை அமைந்துள்ள இடத்திற்கு ஒரு கி.மீ. தொலைவிலேயே வாகனங்கள் யாவுமநிறுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதியின் 3 கி.மீ. சுற்றளவுக்கு முழுக்க போலீஸாரின் கட்டுப்பாட்டில் (சுமார் 5 ஆயிரம் பேர்) நேற்று முதலே கொண்டு வரப்பட்டுவிட்டது.
(முள்ளாங்காடு சோதனைச்சாவடியில் ஒட்டப்பட்டுள்ள மாவோயிஸ்ட்டுகள் எச்சரிக்கை பலகை)
நேற்று காலை முதலே கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரம்யாபாரதி தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் பாதுகாப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆதியோகி திருமுகச்சிலை பிரதிஷ்டை தரிசனம் காண இப்போதிருந்தே உலகம் முழுவதிலுமிருந்து யோகா, தியான ஈடுபாடு கொண்டவர்கள் வரத்தொடங்கி விட்டனர்.
நேற்றே சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வெள்ளுடை, கறுப்பு அங்கி தரித்து தியான லிங்கம் அமைந்திருக்கும் இடத்திற்கும், ஆதியோகி திருவுருவச்சிலை இருக்கும் இருப்பிடத்திற்கும் அலையாய், அலையாய் திரண்டு சென்றதை காணமுடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT