Published : 09 Jun 2016 02:13 PM
Last Updated : 09 Jun 2016 02:13 PM

பதவியில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை: அதிமுக உள்ளாட்சித் தலைவர்கள் கலக்கம்

அதிமுகவில் சட்டப்பேரவைத் தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மாற்றம் தொடங்கிய நிலையில், தற்போது உள்ளாட்சிப் பதவிகளில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது எனக் கூறப்படுவதால், அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையாக வெற்றிபெறாத மாவட்டங்களில், தோல்விக்கான காரணங்களை அக்கட்சித் தலைமை ஆராய்ந்து வருகிறது. அதனால், இந்த மாவட்டங்களில் தற்போது 15 அதிமுக மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியம், நகரச் செயலாளர் மாற்றப்பட்டு அப்பதவிகளில் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்காக கட்சியை தயார்படுத்த இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில், கடந்த மக்களவைத் தேர்தலைப் போல முழுமையான வெற்றியை அடைய அதிமுக ஆயத்தமாகி வருகிறது. அதற்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து அளவில் சாதக, பாதகமான விவரங்களை அதிமுக சேகரித்து வருகிறது.

தற்போது அதிமுகவில் மாவட்டம், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கட்சி பொறுப்புகளில் இருப்பவர்களின் உறவினர்களே, பெரும்பாலும் உள்ளாட்சி பதவிகளிலும் உள்ளனர். இவர்கள் மீண்டும் பதவிகளை கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதிமுகவில் கடந்த காலத்தில் தேர்தல்களில் வாய்ப்பு கிடைக்காத கட்சியினர், கடைநிலை நிர்வா கிகளுக்கு உள்ளாட்சிப் பதவிகள் வழங்கப்பட்டன. அதனால், அதிமு கவில் கீழ்நிலை நிர்வாகிகளும் உள் ளாட்சி அதிகாரத்துக்கு வரலாம் என்ற நிலை இருந்தது.

ஆனால், தற்போது திமுகவை போல அதிமுகவிலும் மாவட்டம், ஒன்றியம், நகரங்களில் குறிப்பிட்ட நிர்வாகிகள், சமீபத்தில் கட்சியில் சேர்ந்தவர்களுடைய குடும்ப ஆதிக்கம் அதிகமாகி இருக்கிறது. இதனால் கிளை, வட்ட, ஒன்றிய, நகர சார்பு அணி பொறுப்புகள், எம்ஜிஆர் காலத்து பழைய நிர்வாகிகள் உள்ளாட்சிகளின் பதவிகளுக்கு வர முடியாமல் தவிக்கின்றனர்.

இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் கூடுதல் வாக்குகள் பெற்று தரும் நிர்வாகிகளுக்கு உள்ளாட்சித்தேர்தலில் வாய்ப்புகள் வழங்கப்படும் என மாவட்டச் செயலர்கள் உறுதி அளித்தனர். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் மாநகர், புறநகர் மாவட்டச் செயலா ளர்கள் சட்டப்பேரவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களில் பகிரங்க மாகவே இதைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் கட்சி மேலிடமும் இந்த முறை மாவட்டம், ஒன்றிய, நகரம் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கும், தற்போது உள்ளாட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கும் மீண்டும் உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனக் கூறப்ப டுகிறது. அதனால், உள்ளாட்சிப் பொறுப்புகள், கட்சிப் பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x