Last Updated : 20 Feb, 2014 05:20 PM

 

Published : 20 Feb 2014 05:20 PM
Last Updated : 20 Feb 2014 05:20 PM

கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க மக்களவையில் கோரிக்கை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் மக்களவையில் கோரிக்கை எழுப்பப்பட்டது.

இந்தக் கோரிக்கையை, திமுகவின் தர்மபுரி தொகுதி எம்.பி.யான ஆர்.தாமரைசெல்வன், 377 விதியின் கீழ் எழுப்பினார்.

இது குறித்து தாமரைசெல்வன் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

'இது உலகம் முழுவதும் இருக்கும் பத்து கோடி தமிழர்களின் கோரிக்கை. டாக்டர். கலைஞர் என அன்புடன் அழைக்கப்படும் கருணாநிதி தம் 14 வயதில் பொதுமக்களுக்கு தொண்டு செய்ய அரசியலுக்கு வந்தவர்.

திராவிட இயக்கத்தின் சாம்பியனான இவர், கீழ்மட்டத்தில் இருந்து அனைத்து தரப்பிலான மக்களுக்காக சேவை செய்தவர். 1957 முதல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இடையில் ஒருமுறை கூட தோல்வி கண்டதில்லை. தீவிர அரசியலுடன் தமிழ் இலக்கியத்திற்காகவும் முக்கியத்துவம் அளித்தவர்.

தமிழ்ப் பட உலகின் 75 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர். 91 வயதிலும் சிறந்த விளங்கும் அறிஞர், சிறந்த ராஜதந்திரி மற்றும் பாடலாசிரியர் ஆவார்.

தேசிய ஒற்றுமை மற்றும் மதநல்லிணக்கத்திற்காக மாநில மற்றும் தேசிய அளவில் பாடுபட்ட அரசியல்வாதி. இந்த வயதில் வேறு எவரும் இவர் அளவுக்கு நாட்டிற்காக பாடுபட்டதில்லை என நம்புகிறேன்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், அனைவரும் டாக்டர். கலைஞர் முத்துவேல் கருணாநிதிக்கு பாரத ரத்னா பட்டம் அளிப்பதில் என்னுடன் இணைந்து அரசிடம் வலியுறுத்துவார்கள் என நம்புகிறேன்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x