Published : 21 Feb 2017 08:13 AM
Last Updated : 21 Feb 2017 08:13 AM

மின்சார செலவை குறைக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை: ரூ.81 கோடியில் சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்தி - ஆண்டுக்கு ரூ.7,210 கோடி மிச்சமாகும்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறையின் மின்சார செலவை குறைக்க பல்வேறு இடங்களில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதற்காக தெற்கு ரயில்வே சார்பில் ரூ.81 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்திய ரயில்வே துறை தினமும் 12 ஆயிரம் ரயில்களை இயக்குகிறது. இதில் தினமும் சுமார் 2.30 கோடி பேர் பயணம் செய்கின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி ஆண்டுதோறும் சுமார் 18 ஆயிரம் கோடி கிலோவாட் மின்சாரத்தை ரயில்வே பயன்படுத்தி வருகிறது. இது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 1.8 சதவீதமாகும். ரயில்கள் இயக்கம் மற்றும் இதர தேவைகளுக்காக ரூ.12 ஆயிரத்து 614 கோடி ஆண்டுதோறும் செலவு செய்யப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வும், அதிகரித்து வரும் மின்சார செலவை குறைக்கும் வகையிலும் நீண்ட காலத்துக்கு பயனளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த எரிசக்தி தொலைநோக்கு திட்டத்தை ரயில்வே உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. நடப்பு நிதியாண்டில் 10 மெகாவாட், 2017-18-ல் 290 மெகாவாட், 2018-19-ல் 500 மெகாவாட், 2019-20-ல் 200 மெகாவாட் என மொத்தம் 1,000 மெகாவாட் சூரிய ஒளி கருவிகளை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 500 மெகாவாட் மின்சாரம் மேற்கூரைகள் மூலமும், 500 மெகாவாட் தரை தளங்கள் மூலமும் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் 2,000 ரயில் நிலையங்களில் 1,000 மெகாவாட் திறனுக்கு சூரிய ஒளி கருவிகளை நிறுவி மின் உற்பத்தி செய்யப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் சூரிய ஒளி பேனல்கள் அமைக்கப்படவுள்ளன.

இதேபோல், வாய்ப்புள்ள இடங்களில் காற்றாலை மின்னுற் பத்தியும் செய்யப்படவுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் மட்டும் சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் ரூ.81 கோடியில் செயல்படுத்தப் படவுள்ளன. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் தனியா ருடன் இணைந்து ரூ.344 கோடியில் 57.5 மெகாவாட் அளவுக்கு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில், ரயில்வே ரூ.73 கோடி முதலீடு செய்கிறது. இத்திட்டத்துக்கு ஏற்கெனவே ரூ.2.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மத்திய பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட 23 ரயில் நிலையங்களில் சூரிய ஒளி மின்சாரம் மூலம் சிக்னல்களை இயக்குவதற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பேனல்கள் நீண்டகால தேவைகளை கருத்தில் கொண்டு தரமானதாக காற்றின் வேகத்தை சமாளிக்கும் வகையிலும், துருப்பிடிக்காத தாகவும் அமைக்கப்படும். மேலும், லெவல் கிராசிங் கேட்களை இயக்குவதற்கு சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக டிஆர்இயு துணை பொதுச் செயலாளர் மனோகரன் கூறும்போது, ‘‘ரயில்வேக்கு சொந்தமான காலியான இடங்களில் 5 சதவீத இடங்களை பயன்படுத்தி 1,109 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது வரவேற்கக்கூடியது. இத்திட்டத்தை தாமதிக்காமல் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ரயில்வே ஆண்டுக்கு ரூ.7,210 கோடி செலவை குறைக்க முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x