Published : 13 Feb 2014 01:00 PM
Last Updated : 13 Feb 2014 01:00 PM

இயக்குநர் பாலு மகேந்திரா மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்

திரைப்பட இயக்குநர் பாலு மகேந்திரா மறைவுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்தியில், "தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், தாங்க முடியாத துயரமும் அடைந்தேன்.

பாலு மகேந்திரா திரையுலகில் இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும், படத் தொகுப்பாளராகவும் பல புதிய உச்சங்களைத் தொட்டவர். வன்முறையையும், மட்டமான ரசனைகளையும் நம்பாமல் உன்னதமான, புரட்சிகரமான கருத்துக்களை போதிக்கும் வகையில் திரைப்படங்களை உருவாக்கியவர்.

தாய்மொழி வழிக் கல்வியையும், குடும்ப உறவுமுறைகளையும் போற்றும் வகையில் அண்மையில் அவர் உருவாக்கிய தலைமுறைகள் படம் என்னைக் கவர்ந்த படங்களில் ஒன்றாகும்.

எனக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவரான பாலு மகேந்திரா ஓர் அற்புதமான மனிதர். என்னுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஈழத்தில் பிறந்து இந்தியாவில் படைப்பாளியாய் உருவெடுத்த அவர், ஈழத் தமிழர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்; தமிழீழ விடுதலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர்.

பாலு மகேந்திராவின் மறைவு திரையுலகிற்கு மட்டுமின்றி, தமிழ் உணர்வாளர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x