Last Updated : 10 Aug, 2016 08:02 AM

 

Published : 10 Aug 2016 08:02 AM
Last Updated : 10 Aug 2016 08:02 AM

சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துணிகரம்: மேற்கூரையில் துளையிட்டு பல கோடி கொள்ளை

மரப்பெட்டிகளை உடைத்து 500 ரூபாய் கட்டுகளை அள்ளிச் சென்றனர்: ரயில்வே போலீஸார் விசாரணை

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சேலத்திலிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் விரைவு ரயில் மூலம் நேற்று முன்தினம் அனுப்பப்பட்டன. வரும் வழியில் அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சேதம் அடைந்த, பழமையான, கசங்கிய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என மத்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங் களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை அந்த பகுதியில் உள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றினர்.

இதில் 342 கோடி ரூபாயை சென்னை யில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்ல வங்கி அதிகாரிகள் முடிவு செய் தனர். அதன்படி இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் 226 மரப்பெட்டிகளில் ரூ.10, ரூ.100, ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக தனித்தனியாக அடுக்கி கட்டப்பட்டன.

பின்னர், அவை சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் விரைவு ரயிலில் தனிப்பெட்டியில் நேற்று முன்தினம் ஏற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அதற்கு ஒரு டிஎஸ்பி தலைமையில் 10 போலீஸார் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்காக வந்தனர்.

சேலத்தில் இருந்து ரயில் சரியாக நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு புறப்பட்டது. பணம் இருக்கும் பெட்டியில் அமர யாருக்கும் அனுமதி கிடையாது. எனவே, பணம் உள்ள ரயில் பெட்டிக்கு முன் பெட்டியிலும், பின் பெட்டியிலும் ரயில்வே பாதுகாப்பு போலீஸார் வந்தனர். ரயில் நின்று சென்ற அனைத்து நிறுத்தங்களிலும் போலீஸார் இறங்கி இறங்கி சீல் சரியாக இருக்கிறதா என்று பார்வையிட்டனர். நேற்று காலை 8 மணிக்கு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர், பயணிகளை இறக்கிவிட்டு யார்டுக்கு சென்றது. அங்கு பணம் இருக்கும் பெட்டி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு மீண்டும் காலை 11 மணிக்கு அந்த பெட்டி எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் எழும்பூர் ரயில் நிலையம் சென்றனர். அங்கு ரயில் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சீலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரயில் பெட்டியின் மேற்கூரை வெல்டிங் கருவி மூலம் உடைக்கப்பட்டிருந்தது.அங்கிருந்த 4 மரப்பெட்டிகளை உடைத்து உள்ளே இருந்த 500 ரூபாய் கட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

5-வது பெட்டியில் ரூ.10, ரூ.20 நோட்டுகள் இருந்ததால் அவற்றை கொள் ளையர்கள் அங்கேயே போட்டுவிட்டு போய்விட்டனர். கொள்ளை போன பணத்தின் மதிப்பு ரூ.5 கோடி வரை இருக்கும் என ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளைபோன பணத்தின் சரியான மதிப்பை அறிய மீதம் உள்ள பணத்தை எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கொள்ளை குறித்து எழும்பூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஓடும் ரயிலில் சினிமா பாணியில் பல கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

கொள்ளை நடந்த இடத்துக்கு தடய வியல் நிபுணர் பஞ்சாட்சரம் தலைமை யிலான தனிப்படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் ரேகை களை சேகரித்தனர். விரைவில் அதன் அறிக்கையை எழும்பூர் ரயில்வே போலீஸிடம் கொடுக்க உள்ளனர்.

கொள்ளை நடந்தது எப்படி?

கொள்ளை நடந்தது எப்படி என பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பணம் கொண்டு வரப்பட்ட சேலம் விரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு புறப்பட்டுள்ளது. அப்போது, முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கொள்ளையர்கள் சிலர் ஏறி இருக்க வேண்டும். அவர்களுக்கு இந்த ரயிலில் பணம் கொண்டு செல்லப்படும் தகவலை வங்கியில் உள்ள எவரேனும் ஏற்கெனவே சொல்லி இருக்க வேண்டும்.

சேலத்தில் இருந்து சென்னை வருவதற்குள் சம்பந்தப்பட்ட ரயில் குறைந்தது 10 நிறுத்தங்களிலாவது நின்றிருக்கும். குறிப்பாக விருத்தா சலத்தில் ஒரு மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பாதுகாப்புக்காக சென்ற போலீஸார் கவனக் குறைவாக இருந்துள்ளனர்.

இந்த நேரத்தில் மின்னல் வேகத்தில் கேஸ் வெல்டிங் கருவியுடன் கொள்ளை யர்கள் விரைவாக ரயில் பெட்டிக்கு மேலே ஏறி மேற்கூரையில் துளையிட்டு உள்ளே சென்றிருக்க வேண்டும். மேலும், அடுத்த நிறுத்தத்தில் வெளியேறி சென்றிருக்க வாய்ப்புள்ளது. இந்த துணிகர கொள்ளையை ஒருவர் மட்டும் செய்திருக்க வாய்ப்பு இல்லை. பலர் சங்கிலி தொடர்போல் செயல்பட்டிருக்க வேண்டும். அதை அடிப்படையாக வைத்தே விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x