Published : 19 Feb 2014 12:00 AM
Last Updated : 19 Feb 2014 12:00 AM

திண்டுக்கல்: ரூ.10 கோடி மோசடி செய்த கணவன், மனைவி கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.10 ஆயிரம் கொடுத்தால், ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்ச ரூபாய் தங்க நாணயம் வழங்குவதாகக் கூறி ரூ. 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கணவன், மனைவியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே தேவிநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி கவுதமி. திண்டுக்கல் தாடிக்கொம்பைச் சேர்ந்தவர் சக்திவேல், இவரது மனைவி சசிபிரபா. இவர்கள் 4 பேரும் திண்டுக்கல் ஆர்.எம்.காலனி யில், ஷேர் மார்க்கெட் நிறுவனம் நடத்தி உள்ளனர். இவர்கள், மாவட்டம் முழுவதும் கிளை அலுவலகங்களைத் தொடங்கி, ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகளில் ரூ.1 லட்சம் தருவதாகவும், முதலீடு செய்யும் தொகைக்கு தகுந்தபடி, ஆண்டுக்கு ஒருமுறை 15 முதல் 20 சதவீதம் வட்டி, கூடுதல் முதலீடு செய்தால் தங்க நாணயம் பரிசு என மலைக்க வைக்கும் பரிசுத் திட்டங்களை அறிவித்து பணம் வசூல் செய்துள்ளனர்.

ஆரம்பத்தில், முதலீடு செய்தவர்களுக்கு வட்டி, தங்க நாணயம் வழங்கினர். இதைப் பார்த்த பொதுமக்கள், இவர்களிடம் பணத்தை முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். மாவட்டம் முழுவதும் 480 பேர் இவர்கள் நிறுவனத்தில் ரூ. 10 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கூறியபடி வட்டி, தங்க நாணயங்களை இவர்கள் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த வாடிக் கையாளர்கள், பணத்தைத் திருப்பிக் கேட்டு நச்சரிக்கத் தொடங்கினர். இதனால், ஷேர் நிறுவன பங்குதாரர்களான காளி முத்து, கவுதமி, சக்திவேல், சசிபிரபா ஆகிய நால்வரும் தலை மறைவாகினர்.அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் போலீஸில் புகார் செய்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த சக்திவேல் (33), அவரது மனைவி சசிபிரபா (27) ஆகியோரை தனிப்படையினர் செவ்வாய்க்கிழமை அதிரடியாகக் கைது செய்து விசாரித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு, பறிகொடுத்த பணத்தை திருப்பி பெற்றுத் தருமாறு முறையிட்டனர்.

போலீஸார் அவர்களை சமாதானம் செய்து பணத்தை திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சக்திவேல், சசிபிரபா ஆகிய இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x