Published : 01 Aug 2016 10:08 AM
Last Updated : 01 Aug 2016 10:08 AM

82 ரயில் நிலையங்களில் 1,400 கேமராக்கள் பொருத்தப்படும்: ரயில்வே பாதுகாப்புப் படையின் மூத்த ஆணையர் தகவல்

பெண்கள் பாதுகாப்பு குறித்து கமிட்டி மூலம் ஆய்வு



82 புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் 1,400 சிசிடிவி கேமராக்கள் பொருத்த இடங்களை தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த தனி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என ரயில்வே பாதுகாப்புப் படையின் மூத்த ஆணையர் அஸ்ரப் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயில்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் ரயில் மார்க்கத்தில் இருக்கும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தேவையான இடங்களில் சுற்றுச்சுவர் அமைத்தல், நுழைவு வாயில்களை முறைப்படுத்துதல், சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் 82 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் படவுள்ளன.

சென்னை ரயில் கோட்ட பாதுகாப்புப் படையின் மூத்த ஆணையர் அஸ்ரப் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற் கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். 82 ரயில் நிலையங்களில் 1,400 சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற் கான இடங்களை தேர்வு செய்யும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நுழைவாயில், நடைமேடைகள், நடைமேம்பாலங் களில் என தேவையை பொறுத்து 12 முதல் 32 இடங்கள் வரை சிசிடிவி கேமராக்களை பொருத்த உள்ளோம். இதற்கான, நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

மின்சார ரயில்களில் தற்போது, தினமும் 22 சர்வீஸ்களில் பெண்கள் பெட்டிகளில் பெண் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த சில மாதங்களில் 88 மின்சார சர்வீஸ்களிலும் பெண்கள் பெட்டிகளுக்கு பெண் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்தவுள்ளோம். இதற்காக ஆட்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ரயில் நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி பெண் ரயில் பயணி களிடமும், ரயில் நிலையங்களிலும் ஆய்வு நடத்தி வருகிறது. இதில், ரயில்வே அதிகாரிகள் மட்டுமல்லாமல், 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் ஈடுபடுகின்றனர். இந்த கமிட்டி மூலம் பரிந்துரைக்கப்படும் முக்கிய கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம். குறிப்பாக பெண்கள் பாதுகாப்புக்காக தனியாக உதவி எண்களை அறிவிப்பது, தனி செயலியை ஏற்படுத்துவது போன்றவை குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x