Published : 21 Sep 2013 07:43 PM
Last Updated : 21 Sep 2013 07:43 PM
கடந்த இரண்டு ஆண்டுகளாக மட்டுமே திரைப்படத் துறை சுதந்திரமாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதியை ஒரு குட்டிக் கதை மூலம் சாடினார்.
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை துவக்கிவைத்தார்.
தமிழ் சினிமா வளர்ச்சிக்கு மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பட்டியலிட்டவர், “சட்டத்திற்கு புறம்பாக திருட்டு வீடியோக்கள் எடுக்கப்படுவதை, தடுக்கும் வகையில், 'காணொலித் திருட்டுத் தடுப்புப் பிரிவு' எனும் ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது; திருட்டு வீடியோ தொழிலில் ஈடுபட்டு குற்றம் இழைப்போரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வழிவகை செய்தது, சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு, கடந்த ஆண்டு, அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், 2013-2014 ஆம் கல்வியாண்டு முதல் அனிமேஷன் அண்ட் விஷுவல் எஃபெக்ட் எனும் புதிய பாடப்பிரிவு தொடங்கப்படவும்; அதற்கென 41 பணியிடங்களை தோற்றுவிக்கவும் 9 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நான் உத்தரவிட்டேன். அங்குள்ள பிரிவ்யூ தியேட்டர் நவீன வசதிகளுடன் 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது. திரைப்படத் துறையினர் நல வாரியத்தில் அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு பல்வேறு
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது ஆட்சியில் திரைப்படத் துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது” என்றார் அவர்.
கருணாநிதி மீது சாடல்...
இந்திய மற்றும் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை பட்டியலிட்ட அவர், திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் தமிழ் சினிமாவில் மற்றவர்களின் வளர்ச்சியைத் தடுத்ததாகக் குற்றம்சாட்டினார்.
“வந்தாரை வாழ வைக்கும் பூமி தமிழ்நாடு. இன்று கூட, பல்வேறு மொழி பேசும் நடிகர், நடிகையர், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், தமிழ்த் திரைப்படத் 5 துறையில் முன்னணியில் இருக்கிறார்கள். தானும் வாழ வேண்டும், அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமாத் துறை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை நான் சொல்லி, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இந்த உலகத்தில் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள் உண்டு. தானும் வாழ வேண்டும், அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களும் உண்டு. எப்படியாவது தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள், எப்போதும் அவர்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறவர்களை மட்டும் அல்லாமல், தனக்குப் போட்டியாக இருப்பவர் எனக் கருதப்படுபவரையும் அழித்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள்” என்ற முதல்வர் ஒரு குட்டிக் கதையைச் சொன்னார்.
குட்டிக் கதை
“ஓர் ஊரில் ஒரு மனிதர் இருந்தார். அவர் நிறைய பாவங்களை செய்ததால், நரகப் படுகுழி என்கிற கிணற்றில் விழுந்து விட்டார். அந்த கிணற்றில், ஏற்கெனவே பாவம் செய்தவர்கள் விழுந்து கிடந்தார்கள். உள்ளே ஏகப்பட்ட சத்தம். இப்பொழுது விழுந்த அந்த மனிதரின் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.
அந்தக் கிணற்றுக்கு பக்கத்தில் ஒரு மகான் இருந்தார். இந்த மனிதர் போடுகின்ற சத்தம் அதிகமாக கேட்டதும், கிணற்றை எட்டிப் பார்த்தார் அந்த மகான். மகானை பார்த்தவுடன், அந்த மனிதர், “சுவாமி! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கத்தினார். அந்த மனிதரைப் பார்த்ததும், மனித சமுதாயத்திற்கு அந்த மனிதர், என்னென்ன கெடுதல் செய்திருக்கிறார் என்ற விவரம் மகானின் கண் முன்னே தெரிந்தது. இருந்தாலும், அந்த மனிதரைக் காப்பாற்ற ஏதாவது வழி உண்டா என்று யோசித்தார்.
ஏதாவது ஒரு நல்ல காரியத்தை அந்த மனிதர், தனது வாழ் நாளில் செய்திருக்கிறாரா என்று பார்த்தார். ஒரு சமயம், அந்த மனிதர் தன் காலடியில் மிதிபட இருந்த சிலந்தியை, தன்னை அறியாமல், மிதிக்காமல் தாண்டி போயிருந்தது தெரிய வந்தது. இந்தச் செயலுக்காக,
அந்த மனிதரை கரையேற்ற முடியுமா என்று சிந்தித்தார். உடனடியாக, அவர் கையில் சிலந்தி ஒன்று வந்து நின்றது. அதனிடமிருந்து, நூலிழை வெளிவர ஆரம்பித்தது. அந்த நூல் இழை, கிணற்றின் ஆழம் வரைக்கும் நீண்டு கொண்டே போயிற்று. உடனே அந்த மகான், கிணற்றில் இருந்த மனிதரைப் பார்த்து, “இந்த நூலைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறி வா” என்றார்.
இதற்கு அந்த மனிதர், “சிலந்தி நூல், என்னைத் தாங்குமா?” என்று கேட்டார். “எல்லாம் தாங்கும். அதைப் பிடித்து வா” என்றார் மகான். சந்தேகத்துடனேயே அந்த நூலிழையை பிடித்து இழுத்துப் பார்த்தார் அந்த மனிதர். நூலிழை வலுவாக இருந்தது. எனவே, அதைப் பிடித்துக் கொண்டு மெதுவாக ஏறி வர ஆரம்பித்தார். பாதி தூரம் வந்தவுடன், அந்த மனிதரின் காலுக்கு கீழே கொஞ்சம் சத்தம் கேட்டது. கீழே குனிந்து பார்த்தார் அந்த மனிதர். வேறு சிலரும், அந்த நூலிழையை பிடித்துக் கொண்டு மேலே வந்து கொண்டிருந்தார்கள். உடனே அந்த மனிதருக்கு கோபம் வந்தது. தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, தன் காலுக்கு கீழே உள்ள நூலிழையை வெட்டிவிட்டார். இனிமேல், தான் மட்டும் மேலே ஏறிவிடலாம் என்று நினைத்தார் அந்த மனிதர்.
ஆனால் நடந்தது என்ன தெரியுமா? மொத்த நூலிழையும் அறுந்து விழுந்தது. அந்த மனிதரும் பொத்தென்று கீழே விழுந்துவிட்டார். மறுபடியும் கத்த ஆரம்பித்தார். ஏற்கெனவே தன்னை அறியாமல், அந்த மனிதர் செய்த ஒரு நற்செயல், அந்த நூலிழைக்கு உறுதியைக் கொடுத்தது. இப்போது அவர் செய்த பாவம் அந்த நூலிழையை வலுவிழக்கச் செய்துவிட்டது. அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம் அந்த மனிதருக்கு இருந்திருந்தால், அந்த மனிதர் கரையேறியிருப்பார். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. எனவே அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டார் அந்த மனிதர். திரைப்படத் துறையால், தானும், தன் குடும்பமும் மட்டும் செழிப்படைய வேண்டும் என்று நினைத்தவர்கள் இந்த நிலைமையில் தான் இன்று இருக்கிறார்கள்” என்றார்.
திரையுலகினருக்கு அறிவுறுத்தல்
மேலும், “திரைப்படம் என்பது, பல்வேறு கலைஞர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் ஒரு கருவி என்றாலும், நல்ல கருத்துகளையும், முற்போக்கு சிந்தனைகளையும், எண்ணங்களையும், இளைய சமுதாயத்தினரிடம் எடுத்துச் செல்லும் வகையிலும்; சாதி மற்றும் மத ரீதியிலான வகையில், பிறர் மனம் புண்படாமல் இருக்கும் வகையிலும்; வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகளை தவிர்த்தும் படங்களை எடுக்க வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்களை இந்தத் தருணத்தில் அன்போடு கேட்டுக் கொள்வதுடன், திரைப்படத் துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது தலைமையிலான அரசு நல்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் முதல்வர் ஜெயலலிதா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT