Published : 03 Jul 2016 11:01 AM
Last Updated : 03 Jul 2016 11:01 AM

காஞ்சிபுரம்: ஆலை தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி

தமிழகத்திலேயே ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்ற பெயர் பெற்றிருந்த காஞ்சிபுரம் மாவட்டம், தற்போது பன்னாட்டு தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக மாறியுள்ளது. இந்த மாவட்டத்தில் பிரதான பன்னாட்டு தொழிற்சாலைகள் மற்றும் துணை தொழிற்சாலைகள் என 2500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த தொழிற்சாலைகளின் பாதுகாப்புக்காக தீ தடுப்பு உகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் அதை பயன்படுத்த தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லாமல் இருந்தது. தீ பரவி, அதிக இழப்பை சந்திக்கும் நிலை இருந்து வந்தது. எனவே தீயணைப்புத் துறை சார்பில், தொழிலாளர்களுக்கு, சம்மந்தப்பட்ட தொழிற்சாலை விருப்பத்தின்பேரில் ‘அடிப்படை தீ தடுப்பு பயிற்சி’ வழங்க கடந்த 2005-ம் ஆண்டு அரசு உத்தரவிட்டிருந்தது.

தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகரித்து, அவற்றில் தீ விபத்துகள் அடிக்கடி நடந்து வந்த நிலையில், ‘அடிப்படை தீ தடுப்பு பயிற்சி’ பெற தங்கள் தொழிலாளர்களை, தொழிற்சாலை நிர்வாகங்கள் அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொழிற்சாலைகளில் தீ பரவுவதை தடுக்க உபகரணங்களைப் பயன்படுத்த தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லாமல் இருந்தது. மேலும் உபகரணங்களை தொடர்ந்து பயன்படுத்தாமல் இருப்பதால், அவசியம் ஏற்படும்போது அவை பயன்படாமலும் போகிறது. அதனால், தீ ஏற்பட்டால், தீயணைப்பு வீரர்கள் வரும் வரை காத்திருக்காமல், அவர்களே தீயை அணைக்கும் வகையில், அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது.

அதன் அடிப்படையில், தொழிற்சாலைகள் அனுப்பி வைக்கும் தொழிலாளர்களுக்கு 10 நாட்கள் ‘அடிப்படை தீ தடுப்பு பயிற்சி’ அளிக்கிறோம். அதில் தீயின் வகைகள், தீயின் தன்மைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள், உபகரணங்களை பராமரிப்பது, உபகரணங்களில் தீ தடுப்பு பொருட்களை நிரப்புவது, தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கும் முறைகள், விபத்து ஏற்பட்ட இடத்தின் அமைவிடத்தை தெளிவாக தெரிவிப்பது போன்ற பயிற்சிகளை அளிக்கிறோம்.

இதற்காக ஒரு நபருக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கிறோம். கடந்த 2001 முதல் இதுவரை 700 பேருக்கு பயிற்சி அளித்திருக்கிறோம். அவர்களுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் களையும் வழங்குகிறோம். இதனால் தொழிற் சாலைகளில் ஏற்படும் சிறு தீயை அவர்களே அணைக்கும் அளவுக்கு தயாராகிவிட்டனர். இங்கு பயிற்சி பெற்றவர்கள், மற்ற தொழிளாளர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும், தங்கள் தொழிலாளர் களுக்கு இதுபோன்ற பயிற்சியை வழங்க முன் வர வேண்டும். அதன் மூலம் அத்தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ விபத்துகளை, தொடக்கத்திலேயே தடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x