Published : 03 Jan 2014 08:40 AM
Last Updated : 03 Jan 2014 08:40 AM
கூட்டுறவு சங்க இயக்குநர்களின் எதிர்ப்பையும் மீறி திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக முதல்வர் அண்மையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். அதே சமயம் பால் சில்லறை விற்பனை விலையில் மாற்றமிருக்காது எனவும் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜனவரி 1-ம் தேதி முதல் பால் விற்பனை விலையை மணப்பாறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திடீரென லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து முறையான கூட்டம் கூட்டாமல் தீர்மானம் எதுவும் இல்லாமல் ஒரு சுற்றறிக்கை மூலம் அறிவிப்பாக பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் அதிகாரிகள் அல்லது சங்கத் தலைவர், செயலர் ஆகியோரின் கையெழுத்து கூட இல்லை.
இதுகுறித்து அந்த சங்கத்தின் இயக்குநர்களில் ஒருவரான ராமனிடம் கேட்டதற்கு, “கடந்த டிசம்பர் 31-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சங்கச் செயலர், ’விலையை உயர்த்தவில்லை என்றால் ஆண்டுக்கு ரூ.95 லட்சம் நஷ்டம் ஏற்படும்’ என்றார். அப்படியொரு தீர்மானம் கொண்டுவரக் கூடாது என்று தெரிவித்தோம். தற்போது, விலையை உயர்த்தி அறிவிப்பு செய்துள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது” என்றார்.
இதுபற்றி கூட்டுறவு சங்கத் தலைவரான ஸ்டெல்லா மேரியிடம் கேட்டதற்கு, “நான் 2 நாட்களாக சொசைட்டிக்குப் போகவில்லை. விலையேற்றம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.
இதேபோல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சங்கத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப் பட்டுள்ளது. இதுபற்றி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு பால் வழங்கும் சங்கங்களில் இந்த விலை உயர்வு செய்யப்படும். அரசு மானியம் இல்லாததால் இது தவிர்க்க இயலாதது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT