Published : 10 Feb 2017 09:03 AM
Last Updated : 10 Feb 2017 09:03 AM
எத்தனை எம்எல்ஏக்கள் ஆளுநரை நேரில் சந்தித்து ஆதரவுக் கடிதம் கொடுத்தாலும் அது சட்டப் பேரவையை கட்டுப்படுத்தாது. பேரவையில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்களோ அவர் மட்டுமே முதல்வராக வரமுடியும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச் சரும் மூத்த அரசியல்வாதியுமான செ.மாதவன் கருத்து தெரிவித் துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள விரிசலால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தனக்குத்தான் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா. சட்டப்பேரவையில் எனது பலத்தை நிரூபிப்பேன் என உறுதியோடு சொல்கிறார் காபந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். மொத்தத்தில் ஒரு இக்கட்டான கட்டத்தைக் கடக்க தத்தளித்துக் கொண்டிருக்கிறது அதிமுக.
ஓ.பி.எஸ்-ஸின் ராஜினாமாவை வாபஸ் பெற ஆளுநர் சம்மதித்து பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் அளிப்பார், சசிகலாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார், ஆளுநர் மாளிகையில் அதிமுக எம்எல்ஏக் கள் அடையாள அணிவகுப்பு நடத்தப்படும் என்றெல்லாம் செய்திகள் சிறகடிக்கின்றன. இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி சட்டப்பேரவையின் அடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து விவரிக்கிறார் தமிழகத்தின் முன்னாள் சட்ட அமைச்சர் செ.மாதவன்
எம்எல்ஏக்களை ராஜ்பவனுக்கு அழைத்துச் சென்று ஆளுநரின் முன்பு அடையாள அணிவகுப்பு நடத்துவது என்பதெல்லாம் நடைமுறையில் இல்லாத வழக்கம். ஆட்சியமைக்க உரிமை கோரும் நபர், தனக்கு இத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்பதற்கான ஆதாரக் கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிக்கலாம். எம்எல்ஏக்கள் விரும்பினால் தனித் தனியாகவும் ஆளுநரிடம் கடிதம் தரலாம். ஆனால், இவை எதுவுமே சட்டப்பேரவையைக் கட்டுப்படுத்தாது. இந்தக் கடிதங் களின் அடிப்படையில் யாரை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்று ஆளுநர் முடிவெடுப்பார்.
இப்போதுள்ள நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதாக முதல்வர் ஓ.பி.எஸ். தெரிவித்திருப்பதால் சட்டப்படி பார்த்தால் அவருக்குத்தான் ஆளுநர் முதல் வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்படி அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்பட்சத்தில், குறிப்பிட்ட தினங்களுக்குள் சட்டப் பேரவையில் ஓ.பி.எஸ். தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் அளிப்பார்.
ஆளுநர் வேறு ஏதாவது அரசியல் அழுத்தங்களுக்கு ஆட் பட்டால், ஓ.பி.எஸ்-ஸை ஒதுக்கி விட்டு சசிகலாவை ஆட்சி யமைக்க அழைக்கலாம். அவருக் கும் சட்டப்பேரவையில் பெரும் பான்மையை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படலாம். இதில் ஏதாவது ஆட்சேபங்கள் எழுந்தால் சசிகலா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர ஆளுநரால் ஓ.பி.எஸ். வலியுறுத்தப்படலாம். இந்த விஷயத்தில் ஆளுநருக்கென தனிப்பட்ட அதிகாரங்களும் உண்டு. அத்துடன் ஆளுநரின் பங்கு முடிந்துவிடுகிறது.
அதன்பிறகு சட்டப்பேரவையின் தலையெழுத்தை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு பேரவைத் தலைவருடையது. சசிகலா தனக்கான நம்பிக்கைகோரும் தீர்மானத்தை சபையில் தாக்கல் செய்தால் அதன்மீது வாக்கெடுப்பு நடத்தப்படலாம். பெரும்பாலும் குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். ஆனால், இதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழு சம்மதம் இருக்க வேண்டும்.
அப்படி இல்லாதபட்சத்தில் உறுப்பினர்களை கை தூக்கவோ அல்லது எழுந்து நிற்கவோ சொல்லி எண்ணிக்கை நடத்தப்படலாம். இதிலும் தங்களுக்கு உடன் பாடில்லை மறைமுக வாக்கெடுப்பு தேவை என ஒரு சில உறுப்பினர்கள் ஆட்சேபனை செய்தாலும் அதற்கு மதிப்பளித்து வாக்கெடுப்பு நடத்த பேரவைத் தலைவர் உத்தரவிட வேண்டும். பேரவைத் தலைவர் சட்டத்தின் ஆட்சியை நடத்துபவராக இருந்தால் இதைத்தான் செய்ய வேண்டும். அவர் நெறி தவறினால் சட்டப்பேரவையில் ரகளை நடக்கவும் வாய்ப்புண்டு.
அண்மைக் காலத்தில் தமிழக சட்டப்பேரவையில் இப்படியொரு சர்ச்சையான விஷயம் குறித்து வாக்கெடுப்புகள் நடைபெற வில்லை. எனவே, இப்போது ஓட்டுச் சீட்டு மூலம் அல்லது மின்னணு முறை மூலம் வாக்கெடுப்பு நடத்து வார்களா என்று தெரியவில்லை. உறுப்பினர்கள் யாருக்கு வாக்களித் தனர் என்ற ரகசியம் காக்கப்பட வேண்டும். பேரவைத் தலைவர் ஒருசார்பாக நடப்பாராயின் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இதற்கு முன் பல மாநிலங்களில் நடந்தும் இருக்கின்றன.
இன்றைக்கு ஓ.பி.எஸ்-ஸுக்கு வந்திருப்பதைப்போல ஒரு சூழ் நிலை 1988-ல் ஜானகி அம் மாளுக்கு வந்தது. அப்போது, சட்டப்பேரவையில் பெரும் பான்மையை நிரூபிக்க அவருக்கு ஆளுநர் வாய்ப்பளித்தார். நாங் களும் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தோம். (மாதவன் இப்போது திமுகவில் இருக்கிறார்) அப்போது திமுக தன்னை ஆதரிக் கும் என பெரிதும் நம்பினார் ஜானகி அம்மாள். ஆனால், திமுகவின் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் எங்களது பலம் என்ன வென்று எங்களுக்குத் தெரிந்து போனதால் ஜானகி அம்மாள் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்ய விரும்பாமல் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டார்.
இவ்வாறு மாதவன் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT