Published : 22 Jul 2016 12:49 PM
Last Updated : 22 Jul 2016 12:49 PM
மதுரை மாநகராட்சி நிர்வாகம் மாவட்ட நூலகத்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.5 கோடி நூலக வரி நிதியை வழங்காமல் இழுத்தடித்து வருவதால், நூலகத்துறை அன்றாட நிர்வாக செலவினங்களுக்கு கூட பணமில்லாமல் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் ஒரு மாவட்ட மைய நூலகம், 67 கிளை நூலகங்கள், 62 ஊர் புற நூலங்கள் உள்பட மொத்தம் 130 நூலகங்கள் உள்ளன. இங்கு 140 நிரந்தர ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தினக்கூலி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள், பொதுமக்களிடம் வசூலிக்கும் சொத்துவரியில் வீட்டு வரியில் 10 சதவீதம் தொகையை, மாவட்ட நூலகத்துறைக்கு நூலக நிதியாக ஆண்டுதோறும் வழங்குகின்றன. இந்ததிநிதியைக் கொண்டே நூலகத்துறையின் ஒட்டுமொத்த செலவினங்களும் நடக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகள் மாதந்தோறும் சொத்துவரியை வசூலிக்கும்போதே நூலகத்துறைக்கு, நூலக நிதியை வழங்கிவிட வேண்டும். ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் இந்த நூலக நிதியை உடனுக்குடன் வழங்காமல் இழுத்தடித்து வழங்குகின்றன.
மாநகராட்சி வழங்கும் சொத்து வரி நூலக நிதியே, மதுரை மாவட்ட நூலகத்துறையின் பிரதான நூலக நிதியாக இருக்கிறது. மதுரை மாநகராட்சி நூலகத்துறைக்கு கடந்த ஆண்டு வரை வழங்க வேண்டிய ரூ.5 கோடி நூலக நிதியை வழங்காமல் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், தினக்கூலி, துப்புரவு ஊழியர்கள் ஊதியம், அன்றாட நிர்வாக செலவினங்கள், கட்டிட பராமரிப்புகளுக்கு பணமில்லாமல் நூலகத்துறை நிதி நெருக்கடியில் தவிக்கிறது.
இதுகுறித்து நூலகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நிரந்தர ஊழியர்களுக்கு மாவட்ட கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. தினக்கூலி, துப்புரவு பணியாளர்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் நூலக நிதியில் இருந்துதான் ஊதியம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 67 நூலகங்களில் 20 கட்டிடங்களுக்கும் மேலாக வாடகை கட்டிடத்தில் செயல்படுகின்றன. இந்த கட்டிடங்களுக்கு மாதந்தோறும் வாடகை, தினக்கூலிப்பணியாளர்களுக்கு ஊதியம், அன்றாட எழுதுப்பொருட்கள், தொலைபேசி, மின்சாரம், குடிநீர் கட்டணத்திற்கு மாதந்தோறும் முதல் தேதி நூலகத்துறைக்கு ரூ.12 லட்சம் நிதி தேவைப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகள் நூலக நிதியை வழங்கினாலும், வழங்காவிட்டாலும் இந்த நிதியை கண்டிப்பாக செலவிட்டே ஆக வேண்டும். வாடகை கட்டிடங்களில் நூலகர்கள், ஊழியர்களுக்கான கழிப்பிட அறை இல்லை. பல நூலகங்கள் போதிய இடவசதியில்லாமல் இடநெருக்கடியில் செயல்படுகிறன.
இவற்றை பராமரிக்கவும், சொந்த கட்டிடம் கட்டவும் நூலகத்துறையில் நிதியில்லை. மாநகராட்சி, மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நூலக நிதியை வழங்க கோரி கடிதம் அனுப்பி உள்ளோம். நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம பஞ்சாயத்துகள் கடிதம் எழுதினால் 1,000 ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் செக்குகள் வழங்கி சமாளிக்கின்றனர்.
மாநகராட்சி, தற்போது ஒரு கோடி ரூபாய் தருவதாக உறுதியளித்துள்ளனர். அந்த நிதி வந்தால் மட்டுமே தற்காலிகமாக நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியும், என்றனர்.
பதிப்பாளர்களுக்கு ரூ.4 கோடி பாக்கி
வாசகர்கள் படிப்பதற்காக ஆண்டுதோறும் புதிய புத்தகங்களை பதிப்பாளர்களிடம் இருந்து பெற்று அரசு, நூலகங்களுக்கு வழங்குகிறது. இந்த வகையில் புதிய புத்தகங்கள் வாங்கிய வகையில் பதிப்பாளர்களுக்கு மதுரை மாவட்ட நூலகத்துறை இதுவரை ரூ.4 கோடி வழங்க வேண்டிய உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டிய நூலக நிதி சரியாக வராததால் பதிப்பாளர்களுக்கு இந்த பணத்தை வழங்க முடியவில்லை. நூலகத்துறையில் உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டிய வரி கணக்குகளை சரியாக பராமரிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. நூலக நிதியை உள்ளாட்சி அமைப்புகளிடம் கறாராக வசூலிக்க முடியவில்லை எனக்கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT