Published : 19 Sep 2016 09:16 AM
Last Updated : 19 Sep 2016 09:16 AM
விளம்பரப் பலகை வைக்க உரிமம் வழங்கும் அதிகாரத்தை மீண்டும் சென்னை மாநகராட்சிக்கு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகரப் பகுதியில் விளம்பரப் பலகைகள் வைக்க, முன்பு சென்னை மாநகராட்சி உரிமம் வழங்கிவந்தது. பின்னர் கடந்த 2003-ல் உரிமம் வழங்கும் அதிகாரத்தை சென்னை மாவட்ட ஆட்சியருக்கு மாற்றி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விளம்பரப் பலகைகளுக்கு உரிமம் வழங்குவதற்காகவே, தனிப் பிரிவு தொடங்கப்பட்டது.
சென்னையில் எங்கேனும் விளம்பரப் பலகை வைக்க வேண்டுமாயின், சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட காவல்துறை, மாநகராட்சி மண்டல அலுவலர், அப்பகுதி வட்டாட்சியர் ஆகியோரிடம் தடையின்மை சான்று பெற வேண்டியிருந்தது.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உரிமம் வழங்கும் பிரிவில் போதுமான பணியாளர்கள் இல்லாத நிலையும் இருந்து வந்தது. இதனால் விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விளம்பரதாரர்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாயினர்.
அதனை கருத்தில் கொண்டு சென்னை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கடந்த 2015-ல் சட்டப்பேரவையில் நடைபெற்ற உள்ளாட்சி துறை மானிய கோரிக்கையில், விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் அமைக்க உரிமம் வழங்கும் அதிகாரம், சென்னை மாநகராட்சிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “விளம்பரப் பலகைகள் வைக்க உரிமம் வழங்கும் அதிகாரம், மாநகராட்சி நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்றவாறு, சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919-ல் விதிகள் மற்றும் சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தது. அவற்றை செய்து தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இனி சென்னையில் விளம்பரப் பலகைகள் வைக்க, மாநகராட்சியை அணுகலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுக வேண்டிய அவசியம் இருக்காது. வட்டாட்சியரிடமும் தடையின்மை சான்று பெற வேண்டிய அவசியம் இருக்காது. பொதுமக்கள் எளிதாக உரிமம் பெற முடியும். இந்த நடைமுறை இம்மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT