Published : 14 Mar 2017 10:10 AM
Last Updated : 14 Mar 2017 10:10 AM

உள்ளாட்சி: உங்கள் ஊர்... உங்கள் ஏரி...உங்கள் உரிமை!

தமிழகத்தில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப் படவில்லை. உள்ளாட்சித் தேர் தலை எதிர்கொள்ள ஆட்சி அதி காரத்தில் இருப்பவர்களுக்கு பயம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் சக்தியின் மீதான பயம் அது. இளைஞர்கள் மீதான பயம் அது. மெரினாவிலும் நெடுவாசலிலும் பெரும் திரளாக ஒன்றிணைந்த மக்கள் சக்தியின் மீதான பயம் அது!

எனவேதான் சொல்கிறேன், இளைஞர்கள், மாற்று அரசியலை விரும்பும் நேர்மையானவர்கள் நிறையப் பேர் உள்ளாட்சித் தேர்த லில் போட்டியிட வேண்டும். ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் படித்த இளைஞர்கள் குறைந்தது 10 நபர்களாவது களமிறங்க வேண்டும். வெற்றி, தோல்வி எல்லாம் பின்பு. நல்லதோர் அனுபவம் கிடைக்கும். அரசியலின் அடிப்படையைப் புரிந்துக் கொள்ளலாம்.

தவிர, உள்ளாட்சித் தேர்தல் களம் என்பது அரசியல் கட்சியினருக்கானது மட்டுமல்ல; அது எவருடைய குடும்பச் சொத்தும் அல்ல. அது பொது மேடை என்பதை உணர்த்தலாம். முன்புபோல தவறுகள் செய்துவிட முடியாது. கேள்வி கேட்க நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்தலாம். எந்த ஒரு விஷயமும் குறுகலான வெளியில் அல்லாமல் பொதுவெளிக்கு வரும்போதுதான் ஜனநாயகம் தழைக்கும். தவிர, உள் ளாட்சிப் பிரதிநிதியின் பணி என்பது சாதாரண ஒன்றல்ல. உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது.

நகரமயமாக்கம் அது சார்ந்த விவசாயத்துக்கான தண்ணீர்ப் பற்றாக்குறை, குடிநீர்ப் பிரச்சினை இவற்றை எல்லாம் பார்த்தீர்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் அளவிலேயே எளிதில் தீர்வு காண இயலும். நமது அடிப்படை பிரச்சினையான நீர் நிலைகளை மீட்டாலே பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்து விடும். இன்று பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அநாதைகளாக கிடக்கின்றன. காஞ்சிபுரம் மாவட் டத்தின் கூடுவாஞ்சேரி ஏரியின் பெரும் பரப்பை ஆக்கிரமித்த ஆகாயத் தாமரை தாவரங்கள் அதன் இணைப்பு கால்வாய் வழியாக மூன்று கி.மீ தொலைவில் இருக்கும் ஆதனூர் ஏரிவரை பரவியிருக்கிறது.

சமீபத்தில் கோவை இளைஞர்கள் சுமார் 300 பேர் வரை ஒன்று திரண்டு பேரூர் ஏரியைத் தூர் வாரியிருக் கிறார்கள். மதுக்கரை வட்டத்தில் வெள்ளலூர் குளத்துக்கு வரும் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. இதனால், குளத்துக்குத் தண்ணீர் வந்து 15 ஆண்டுகளாகி விட்டன. சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வறண்டுவிட்டது. தற்போது அதே குழுவினர் ஆக்கிர மிப்புக்கு எதிராகவும் குரல்களை எழுப்பி வருகின்றனர். ஆனால், சட்டப்படியே தமிழகத்தின் பெரும் பாலான ஏரிகளையும் எளிதாக தூர் வார முடியும். எப்படி?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏரிகள், குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் கிராம மக்கள், விவசாயிகள் வண்டல் மண் எடுக்க முடியாத நிலை இருந்தது. ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு திருத்தப்பட்ட ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது. பலரும் அறியாத இந்த அரசாணையை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அறிந்துக்கொள்வது மிகவும் அவசியம். ஏரிகளில் வண் டலை அள்ளுவதை வரையறை செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மண்டல வருவாய் அலுவலர், வேளாண் திட்ட இயக்குநர், இணை இயக்குநர், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர், கனிம வளத்துறை துணை இயக்குநர் அல்லது உதவி இயக்குநர் ஆகி யோர் இதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு ஏரிகள் இருக்கின்றன. எந்தெந்த ஏரிகளில் எவ்வளவு ஆக்கிர மிப்புகள் இருக்கின்றன? எவ்வளவு சீமைக் கருவேல மரங்கள் இருக் கின்றன? எவ்வளவு வண்டல் மண் படிந்துள்ளது? கிராவல் மண் எவ்வளவு உள்ளது? சவுடு மண் எவ்வளவு உள்ளது? எந்தெந்த தேவை களுக்கு மண் அளிக்கலாம்? எவ்வளவு ஆழம் வரைக்கும் அள்ளலாம்? உள்ளிட்ட விஷயங்களை இந்தக் குழு தீர்மானிக்கும். பின்பு வண்டல் மண் எடுக்க வேண்டிய ஏரிகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் உள்ளிட்ட பொது இடங்களில் வைப்பார்கள். அதில் வண்டல் மண் எடுக்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

அதன்படி விவசாயிகள் அல்லது உள்ளூர்வாசிகள் ஒவ்வொருவரும் வீட்டு உபயோகத்துக்கு அல்லது விவசாயப் பயன்பாட்டுக்கு 30 கன மீட்டர் வரையில் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம். இதன்படி தோராயமாக 10 சிறு லாரி லோடுகள் வரை வண்டல் கிடைக்கும். இதற்கு மேல் மண் தேவை என்றால் அந்தந்த மாவட்டத்தில் நிர்ணயிக்கப்படும் சிறு கட்டணத்தை கட்டி எடுத்துக்கொள்ளலாம். ஆனால், 10 லோடுகள் என்பதே ஒரு நடுத்தர விவ சாயிக்கு போதுமானதாக இருக்கும். ஏரிகளில் சேரும் வண்டல் மிகவும் வளமானது என்பதால் செயற்கை உரம் உள்ளிட்ட செலவுகளை வெகுவாக மிச்சம் பிடிக்கலாம்.

ஏரிக்குள் வண்டலை அள்ளவும் சில நிபந்தனைகள் இருக்கின்றன. உள்ளூர் சூழலைப் பொறுத்து எவ்வளவு ஆழம் வரை வண்டல் மண் அள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவே தீர்மானிக்கும்.பொதுவாக பார்த்தோ மானால் ஏரியின் கரையின் உயரம் எவ்வளவு இருக்கிறதோ, அதைவிட இருமடங்கு ஆழம் வரை மட்டுமே ஏரிக்குள் வண்டலை அள்ளலாம். ஏரியின் உள்பகுதியில் கரையை ஒட்டி மண் எடுக்கக் கூடாது. கரை பலவீன மாகிவிடும் என்பதால் கரையில் இருந்து சற்று தள்ளி ஏரியின் உள் பகுதியில் மட்டுமே வண்டலை எடுக்க வேண்டும். வண்டலை எடுப்பதற்காகக் கரையை உடைத்து தனியாக சாலை போடக் கூடாது. கரையின் சாலையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கரையைச் சேதப்படுத்தக் கூடாது. எடுத்த மண்ணை ஏரிக்குள் குவித்து வைக்கக் கூடாது.

தமிழகத்தில் ஒரு சில மாவட் டங்களைத் தவிர மேற்கண்ட அரசாணை எங்கும் நடைமுறைப் படுத்தப்பட்டதுபோல தெரியவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ‘தண்ணீருக்கான பொது மேடை’ அமைப்பின் இளைஞர்கள் இதனைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் புதுக்குறிச்சி ஏரி, வடக்கு மாதவி ஏரி, குளத்தூர் குப்பன் ஏரி ஆகியவை நீண்ட ஆண்டு களாக தூர் வாரப்படாமல் இருந்தன. அதனை தூர் வாரக் கோரி பல்வேறு மனுக்கள் அளித்தும் பலன் இல்லை. இதனால், ஒருங்கிணைந்த இளைஞர்கள் மேற்கண்ட அர சாணையை இணைத்து, அதன் அடிப் படையில் விவசாயிகள் வண்டல் மண்ணை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் நந்த குமாரிடம் மனு அளித்தனர்.

இளைஞர்களின் ஆர்வத்தை பார்த்த ஆட்சியர் உடனடியாக பணிகளை முடுக்கிவிட்டார். அதன்படி மூன்று ஏரிகளிலும் விவசாயிகள் தாரளாமாக வண்டல் மண்ணை எடுத்துக் கொண்டார்கள். ஏரியும் பாதி அளவுக்கு தூர் வாரப்பட்டிருக்கிறது. மீண்டும் அடுத்த விவசாயப் பணிகள் தொடங்கும்போது மீதமிருக்கும் வண்டலையும் விவசாயிகள் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

அதேசமயம் மேற்கண்ட அரசாணை யில் குறைபாடுகளும் இருக்கின்றன. விவசாயிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் அதே அரசாணை வணிகரீதியாக ‘கிராவல்’ மற்றும் ‘தரை’யை வெட்டிக் கொள்ளலாம் என்கிறது. இது ஏரிகளையே முற்றிலும் அழிக்கும் செயல். அதிகாரிகள் துணையுடன் அப்படியும் ஒரு முயற்சி சென்னை திருப்போரூர் அருகே நடந்தது. என்ன ஆனது பின்பு? நாளை பார்க்கலாம்.

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x