Last Updated : 26 Nov, 2013 12:00 AM

 

Published : 26 Nov 2013 12:00 AM
Last Updated : 26 Nov 2013 12:00 AM

தமிழகத்தில் 17 அணைகள் ரூ.87 கோடி செலவில் புனரமைப்பு

தமிழ்நாட்டில் ரூ.87 கோடி செலவில் 17 அணைகளை புனரமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

ரூ.745 கோடி

அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கு உலக வங்கி ரூ.2,100 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ.745.49 கோடி கிடைத்திருக்கிறது.

தமிழ்நாடு நீர்வள ஆதாரத் துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், வேளாண்மைப் பொறியியல் துறை ஆகியன இணைந்து 4 கட்டங்களாக மொத்தம் 110 அணைகளை புனரமைக்கவுள்ளன.

முதல்கட்டமாக 17 அணைகள்

அதன்படி, முதல்கட்டமாக மதுரை மண்டலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொய்கையாறு, நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு, சேர்வலாறு, அடவிநயினார்கோவில், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு, சென்னை மண்டலத்தில், வேலூர் மாவட்டத்தில் உள்ள மோர்தானா, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர், கோமுகி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள சித்தமல்லி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடகனாறு, கோவை மாவட்டத்தில் உள்ள காடம்பாறை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவிலாஞ்சி, கிளன்மோர்கன், முக்குருத்தி, போத்திமண்டு ஆகிய 17 அணைகளில் ரூ.87 கோடி செலவில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன.

நீர்க்கசிவு நிறுத்தப்படும்

குறைந்தபட்சமாக பொய்கையாறு அணைக்கு ரூ.1.15 கோடியும், அதிகபட்சமாக மணிமுத்தாறு அணைக்கு ரூ.17.97 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், அணைகளின் கரைகள் பலப்படுத்தப்படும். மழை காரணமாக கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு சரிசெய்யப்படும். தண்ணீரில் உள்ள அமிலத்தன்மை காரணமாக அணையின் கான்கிரீட் அமைப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு கசிவுநீர் வெளியேறுவதைத் தடுத்தல், ஷட்டர், மின் மோட்டார், ஜெனரேட்டர் ஆகியவற்றில் பழுதுநீக்குதல், ஜெனரேட்டர் இல்லாத அணைகளுக்கு ஜெனரேட்டர் வழங்குதல், அணை வளாகத்தில் உள்ள அணுகு சாலைகளை சீரமைத்தல், அணையின் முன் பகுதியில் 30 மீட்டர் இடைவெளியில் உள்ள நீர்வழிந்தோடிகளை சீரமைத்தல், கசிவுநீர் ஓடைகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதன்மூலம் அணையின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், அணையில் இருந்து நீர்க்கசிவு முற்றிலுமாக தடுக்கப்படும்.

விரைவில் பணிகள் தொடங்கும்

மழையின் அளவைக் கொண்டு அணைக்கு வரும் நீரினைக் கணக்கிட்டு, தொழில்நுட்ப ஆய்வு செய்து, மத்திய நீர்வள ஆணைய முன்னாள் நிபுணர்களைக் கொண்ட அணை பாதுகாப்புக்கான மேற்பார்வைக் குழுக்களின் பரிந்துரையைப் பெற்று, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து உலக வங்கி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பொய்கையாறு, அடவிநயினார்கோவில், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு, மோர்தானா ஆகிய அணைகளின் புனரமைப்புப் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. வீடூர், கோமுகி அணைகளின் புனரமைப்புப் பணிக்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.

உலக வங்கியின் ஒப்புதல் கிடைத்ததும், இந்த 8 அணைகளில் புனரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x