Published : 03 Dec 2013 09:25 AM
Last Updated : 03 Dec 2013 09:25 AM

ஏற்காடு தேர்தலில் திமுக வெற்றி பெறும்: கருணாநிதி நம்பிக்கை

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏற்காடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் முடிந்துவிட்டது. திமுக சார்பில் அந்தத் தொகுதியிலே முகாமிட்ட வர்கள் எல்லாம் சொந்த ஊர் திரும்பி விட்டனர். நானும், பொதுச்செயலாளர் அன்பழகனும் உடல்நிலை காரணமாக பிரச்சாரத்துக்கு செல்லவில்லை. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அங்கேயே தங்கி கிராமம் கிராமமாகச் சுற்றி வந்திருக்கிறார்.

இது பொதுத் தேர்தல் அல்ல. ஒரு தொகுதியிலே நடக்கும் இடைத்தேர்தல்தான். இந்தத் தேர்தலிலும் ஆளுங்கட்சியை வெற்றிபெறச் செய்துவிட்டால், அவர்கள் மேலும் அராஜகங்களிலே ஈடுபட வழி ஏற்பட்டு விடும். விவசாயிகளின் வேதனையை கேட்க வேண்டியதில்லை. மின்வெட்டு மீண்டும் ஆரம்பமாகி விட்டது. தொழில் நிறுவனங்கள் திணறுகின்றன. தேர்வு வாரியங்கள் நடத்தும் தேர்வுகளில் ஏராள மான குளறுபடிகள். ஏற்கனவே திமுக அரசு தீட்டிய திட்டங்களுக்கெல்லாம் மூடு விழா நடத்துகிறார்கள். எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு எதிராக பேசினால் உடனே அவதூறு வழக்குதான். விலைவாசியோ ஏறிக் கொண்டே போகிறது.

இவற்றுக்கெல்லாம் பாடம் கற்பிக்க வேண்டாமா? அதற்கொரு வாய்ப்பாக நடக்க இருப்பதுதான் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க் கட்சிகள் போட்டியிடவில்லை. அவர்களின் ஆதரவு கோரி நான் கடிதம் எழுதியது அனைவருக்கும் தெரியும். ஒரு சில கட்சிகள் அதற்குப் பதில் எழுதவில்லை. மவுனம் சம்மதத்துக்கு அடையாளம் என்பார்கள். அதை அந்தந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அறிந்திருப்பார்கள்.

எனவே, இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பாடம் கற்பிக்க, திமுகவுக்கு வாக்களித்து வெற்றி தேடித் தரவேண்டும். திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை பெறுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x