Last Updated : 21 Apr, 2014 03:00 PM

 

Published : 21 Apr 2014 03:00 PM
Last Updated : 21 Apr 2014 03:00 PM

கோவை: கட்சிகளுக்கு போட்டியாக தேர்தல் ஆணையம்

16வது மக்களவைத் தேர்தல் வரும் 24ம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. களம் கண்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி முனைப்பில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடும் கட்டுப்பாடுகளால் விளம்பரங்கள் குறைந்தாலும், இந்த தேர்தல் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை தெளிவாக காட்டியுள்ளது. தட்டி, பேனர், சுவர் விளம்பரம் என்று காலம் கடத்திய கட்சிகள் எல்லாம் செல்போன், சமூக வலைத் தளம் போன்றவற்றில் தங்களை முன்னிலைப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக பிரச்சார நெடி அதிகமாக, கடந்த ஒரு வாரமாக செல்போன்கள் மூலம் ஒவ்வொரு கட்சிகளும் தங்களை மக்களிடம் கொண்டு செல்ல, படாதபாடு பட்டு வருகின்றன. பதிவு அழைப்புகள் மூலமும், குறுஞ்செய்தி மூலமும் சாமானியனின் கைபேசிக்கு முதல்வரின் (குரல்) அழைப்பு வரும் வகையில் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன.

இந்த பிரச்சாரங்கள் அனைத்தும், இரு தினங்களில் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் யுக்தியை தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ளது. கோவை மாவட்ட ஆட்சியரும், கோவை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் அலுவலருமான அர்ச்சனா பட்நாயக், மக்களின் தொலைபேசியில் பேசும் வகையில் பதிவு அழைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் பிரிவும், கோவை ரத்தினம் கல்லூரியும் இணைந்து இந்த விழிப்புணர்வு அழைப்பு பதிவை அறிமுகப்படுத்தியுள்ளன.

+91 - 4071011511 என்ற இலவச எண்ணிற்கு அழைப்பு கொடுத்தால், அது பதிவானவுடன் அழைப்பு துண்டிக்கப்படுகிறது. உடனே பதிவு செய்யப்பட்ட அழைப்பில் ஆட்சியரின் அர்ச்சனா பட்நாயக்கின் குரல் ஒலிக்கிறது. அதில் 24ம் தேதி வாக்களிக்க வேண்டும். அது அனைவரது கடமை. அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம். அனைவரும் வாக்களிக்க வேண்டும். அது நமது கடமை என குரல் பதிவாகியுள்ளது.

எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்ட அரசியல் கட்சி குரல்கள் மாறி, கட்டாயம் வாக்களியுங்கள், அது உங்கள் கடமை என வாக்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அழைப்புகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக கோவை மாவட்ட நிர்வாகம் வாக்குப்பதிவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதில் ஒரு முயற்சியே இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x