Published : 14 Feb 2014 11:18 AM
Last Updated : 14 Feb 2014 11:18 AM

கம்பம் பள்ளத்தாக்கு நெற்பயிரை காக்க உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை பாதுகாக்கத் தேவையான தண்ணீரை முல்லைப் பெரியாறு அணையிலிருந்து அரசு உடனடியாக திறந்துவிடவேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி திடீரென நிறுத்தப்பட்டு விட்டதால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இரண்டாம் போக நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில், 17 கால்வாய்களிலும் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

அனைத்துக் கால்வாய்களிலும் உடனடியாக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்றால் கதிர் முற்றும் நிலையில் உள்ள பயிர்களில் நெல்லுக்கு பதில் பதர் தான் கிடைக்கும். இளம் நிலையில் உள்ள நெற்பயிர்கள் கருகிவிடும் ஆபத்து உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்படும்.

கம்பம் சின்ன வாய்க்கால், வைரவன் வாய்க்கால், உத்தமுத்துக் கால்வாய் ஆகிய மூன்று கால்வாய்களிலும் ஒரு பாய்ச்சலுக்கு தண்ணீர் திறந்து விட்டால் கதிர் முற்றும் நிலையில் உள்ள பயிர்கள் முழுவதையும் காப்பாற்றிவிட முடியும். மற்ற பயிர்களுக்கு இன்னும் சில நாட்கள் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்படும் பட்சத்தில் அவற்றையும் முழுமையாக காப்பாற்றிவிட முடியும்.

ஆனால், பெரியாறு அணையில் உள்ள நீர் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும், பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும் மறுத்து விட்டனர். இக்கோரிக்கையை முன்வைத்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. உழவர்களின் கோரிக்கையை ஏற்று கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட வேண்டிய தமிழக அரசு, போராட்டம் நடத்திய 115 விவசாயிகளை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை பாதுகாக்கத் தேவையான தண்ணீரை அரசு உடனடியாக திறந்துவிடவேண்டும். தண்ணீர் கேட்டு போராடியதற்காக 115 விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்". இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x