Published : 28 Sep 2013 03:21 PM
Last Updated : 28 Sep 2013 03:21 PM
மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்க அடையாறு, கூவம் ஆறுகளும், பக்கிங்காம், விருகம்பாக்கம்-அரும்பாக்கம், ஓட்டேரி நல்லா கால்வாய்களும் ரூ.3 கோடியே 62 லட்சம் செலவில் தூர்வாரப்படுகின்றன.சென்னை மாநகரில் அடையாறு, கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய், விருகம்பாக்கம்-அரும்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் ஆகியவை நகரில் 50 கி.மீ. தூரத்திற்கு அங்கும், இங்கும், குறுக்கு, நெடுக்குமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆறுகள், கால்வாய்களில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டுவதாலும், கழிவுநீர் கலப்பதாலும் நீர்வழிப் பாதை அடைபடுகிறது. இவற்றை தூர்வாரினால்தான் மழைக்காலத்தில் வெள்ளநீர் ஊருக்குள் புகுவதைத் தடுக்க முடியும். எனவே பொதுப் பணித்துறை, ரூ.3.62 கோடி செலவில் நகரில் ஓடும் ஆறுகள், கால்வாய்களை 10-க்கும் மேற்பட்ட பொக்லைன்களைக் கொண்டு தூர் வாரி வருகிறது.
பருவமழைக் காலத்தில் போரூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, ஒக்கியம் துரைப்பாக்கம் உள்ளிட்ட 58-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பகுதிகளில் தூர்வாரும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கக்கூடும் என்பதால் அக்டோபர் மாதம் 10-ந் தேதிக்குள் தூர்வாரும் பணியை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், மழைநீர் வேகமாக கடலுக்குப் போகும் வகையில் முட்டுக்காடு முகத்துவாரம், நேப்பியார் பாலம் அருகே உள்ள கூவம் முகத்துவாரம், அடையாறு முகத்துவாரம் ஆகிய மூன்றிலும் அவ்வப்போது அடைப்பு நீக்கப்படுகிறது. முட்டுக்காடு முகத்துவார பகுதி மட்டும் 70 மீட்டர் வரை அகலப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், இந்த ஆண்டு வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, ஒக்கியம் துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்று பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT