Published : 21 Mar 2014 09:59 PM
Last Updated : 21 Mar 2014 09:59 PM
தோல்வி பயத்தினால்தான் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், நாட்டின் வளர்ச்சி சரிந்துள்ளதற்கு அவரே காரணம் என்றும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா சாடினார்.
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியது:
"இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சரான சிதம்பரம் உங்களுக்கு ஏதாவது செய்தாரா? இல்லை. உங்கள் வளர்ச்சியிலும் ப. சிதம்பரம் அக்கறை செலுத்தவில்லை. நாட்டின் பொருளாதாரத்திலும் அக்கறை செலுத்தவில்லை. இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருப்பதற்கு சிதம்பரத்தின் நடவடிக்கையும் முக்கியக் காரணம்.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் நிதி அமைச்சராக 2004-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை சிதம்பரம் இருந்தார். மீண்டும் 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் தான் இந்திய நாட்டின் வளர்ச்சி சரிந்துள்ளது. பண வீக்கம் அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்துள்ளது. மொத்தத்தில் இந்திய நாட்டின் பொருளாதாரம் அழிவின் விளிம்பிற்கே சென்றுவிட்டது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் திட்டச் செலவினங்களுக்கு அதிக நிதியை ஒதுக்குவது போல் ஒதுக்கிவிட்டு; பின்னர் திருத்திய மதிப்பீட்டில் அதனை கணிசமாக குறைத்து விடுவதை வாடிக்கையாக கொண்டு இருப்பவர் ப. சிதம்பரம். 2013-2014 ஆம் நிதி ஆண்டின் திட்டச் செலவுகளுக்கான மதிப்பீட்டுடன் திருத்திய மதிப்பீட்டினை ஒப்பிடும் போது; 79,790 கோடி ரூபாய் நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 14.5 விழுக்காடு நிதி குறைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவும் சரியாக தரப்படுவதில்லை.
உதாரணமாக மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்புடன் 'அனைவருக்கும் கல்வி' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கென 2011-2012 ஆம் ஆண்டிற்கு 1,891 கோடியே 42 லட்சம் ரூபாய் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், 13-வது
நிதிக் குழு அளித்த 126 கோடி ரூபாய் போக மீதமுள்ள 1,765 கோடியே 42 லட்சம் ரூபாயில் 65 விழுக்காடு தொகையை மத்திய அரசு அளிக்க வேண்டும். மீதமுள்ள 35 விழுக்காடு தொகையை மாநில அரசு அளிக்கும். மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய தொகையில் 428 கோடியே 12 லட்சம் ரூபாய் இன்னமும் வரவில்லை.
இதே போல், 2012-2013 ஆம் ஆண்டிற்கான 439 கோடியே 43 லட்சம் ரூபாயும்; 2013-2014 ஆம் ஆண்டிற்கான 17 கோடியே 38 லட்சம் ரூபாயும் மத்திய அரசிடமிருந்து இது நாள் வரை வரவில்லை. கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில மன்றத்தின் திட்டத்திற்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையில் 2012-2013 ஆம் ஆண்டுக்கு உரிய 5 கோடியே 56 லட்சம் ரூபாய் இதுவரை வரப் பெறவில்லை. இதே போன்று 2013-2014 ஆம் ஆண்டில் 11 கோடியே 27 லட்சம் ரூபாய் இன்னமும் வரப் பெறவில்லை. கல்வித் துறை தொடர்பான இந்த இரண்டு திட்டங்களின் கீழ் மட்டும் 901 கோடியே 76 லட்சம் ரூபாய் மத்திய அரசிடமிருந்து இன்னும் வரப் பெறவில்லை.
பதிமூன்றாவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான சாலை பராமரிப்புத் தொகையான 931 கோடி ரூபாய் தமிழகத்திற்கு மத்திய அரசால் வழங்கப்படவில்லை. மாநில அரசுக்கு வழங்க வேண்டிய பணத்தை மத்திய அரசு தராமல் காலம் தாழ்த்தினால்; மாநில அரசுகள் எப்படி செயல்பட முடியும் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சிதம்பரம் இந்த நாடாளுமன்ற தொகுதிக்கு செய்ததாக சொல்லிக் கொள்ளும் பணி வங்கிக் கிளைகளை திறந்து வைத்தது தான். சுமார் 200 வங்கிக் கிளைகள் சிவகங்கை தொகுதியில் திறக்கப்பட்டுள்ளதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ப. சிதம்பரம். வங்கிகளை திறப்பதால் மட்டும் ஒரு பகுதி வளச்சி பெற்றுவிடாது. வேளாண் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என பல்வேறு வளர்ச்சிகள் ஏற்பட்டால் தான் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அது வழிவகுக்கும். தென் தமிழகம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தென் தமிழகம் தொழில் வளர்ச்சி பெறும் வகையில் தொழிற் பூங்காக்களை உருவாக்கவும்; அங்கு தொழில் துவங்க முனைவோருக்கு புதிய சலுகைகள் அளிக்கவும் எனது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தவிர புதிய தொழிற் கொள்கை வெளியிடப்பட்டு அதிலும் தொழில் முனைவோருக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நடவடிக்கை எதையாவது மத்திய அமைச்சர் சிதம்பரம் எடுத்தாரா?
இதே போன்று மாநில அரசின் அதிகாரங்களை பறிப்பதிலும்; நிதி ஆதாரங்களை குறைப்பதிலும், செலவுகளை மாநில அரசுகளின் மீது திணிப்பதிலும்; கை தேர்ந்தவர் ப. சிதம்பரம். ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதிலும் வல்லவர் ப. சிதம்பரம். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற சிவகங்கை மக்களவைத் தேர்தலில் ஜனநாயக ரீதியில் சிதம்பரம் வெற்றி பெற்றார் என்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரால் மறு வாக்கு எண்ணிக்கை கோரப்பட்டது. அந்தக் கோரிக்கை ஏன் நிராகரிக்கப்பட்டது? சிதம்பரம் அதனை எதிர்கொண்டு இருக்கலாமே? மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம்? எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை எதிர்கொள்ள அஞ்சி இந்த தேர்தல் வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஒரு மனுவினை ப. சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
சிதம்பரத்தால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. சிதம்பரத்திற்கு எதிரான தேர்தல் மனு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை சிதம்பரத்தின் வெற்றி என்பது மோசடியான ஒன்று. சிதம்பரத்திற்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வருகிறதோ இல்லையோ; உங்களின் தீர்ப்பு வருவதற்கான காலம் கனிந்துவிட்டது. "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
தோல்வி பயத்தினால் "வீராப்பு" பேசும் சிதம்பரம், இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சிதம்பரத்தை இந்தத் தேர்தலில் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். சிதம்பரத்திற்கு உறுதுணையாக இருந்த தி.மு.க.-வையும் நீங்கள் இந்தத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஜனநாயகத்திற்கு களங்கம் ஏற்படுத்தியவர்களை நீங்கள் வீழ்ச்சி அடையச் செய்ய வேண்டும். ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த சிதம்பரம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை B டீம் என்று வருணித்துள்ளார். சிதம்பரம் சொல்வது போல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் யாருக்கும் B டீம் அல்ல. இது தனி டீம். இது தான் முதன்மை டீம்.
இது தமிழர்களின் நலன்களை பாதுகாக்கும் டீம். தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் டீம். தமிழகத்தை முதன்மை பாதையில் அழைத்துச் செல்லும் டீம். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் டீம். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் டீம். தமிழிகத்தை பாதுகாக்கும் டீம். கொள்ளையர்களை விரட்டும் டீம். பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் டீம். விலைவாசியை கட்டுப்படுத்தும் டீம். மக்கள் விரோத சக்திகளை அழிக்கும் டீம்.
இந்த A டீம், B டீம் என்பதெல்லாம் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குத் தான் பொருந்தும். ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டை நடத்துவது போல காங்கிரசும்; அதன் கூட்டணிக் கட்சிகளும்; அரசியல் விளையாட்டை நடத்துகின்றன. இந்த அரசியல் விளையாட்டின் உரிமையாளர் காங்கிரஸ் கட்சி. இந்தக் கூட்டணியில் இருந்த தி.மு.க. தான் அதனால் வாங்கப்பட்ட அணி. தி.மு.க-வுக்கு கொள்கையும் கிடையாது. கோட்பாடும் கிடையாது.
இந்த ஐ.பி.எல். விளையாட்டில் வீரர்கள் எப்படி ஏலத்தில் எடுக்கப்படுகிறார்களோ; அதே போல் அரசியல் விளையாட்டில் எண்ணிக்கையைப் பெற்று; அதற்கேற்ப பேரங்களை பேசி பதவிகளை அடைய வேண்டும் என்பது தான் தி.மு.க-வின் நோக்கம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் பிரதமர் பதவி, அமைச்சர் பதவி என்பதெல்லாம் பெரிதல்ல. தமிழகத்தின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றனவா? தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றனவா? தமிழர் வாழ்வு தழைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது தான் முக்கியம். தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை கூட தராமல் பதவியில் இருந்து கொண்டு வாக்களித்த மக்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளைச் செய்யாமல்; வார்த்தை ஜாலத்தால் மக்களை ஏமாற்ற நினைக்கும் சிதம்பரத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும், அதற்கு முழு ஆதரவு அளித்த தி.மு.க-விற்கும் நீங்கள் இந்தத் தேர்தலில் தக்கப் பாடம் புகட்ட வேண்டும். மீண்டும் எழுந்திருக்க முடியாதபடி மரண அடி கொடுக்க வேண்டும்" என்றார் ஜெயலலிதா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT