Published : 26 Oct 2014 02:06 PM
Last Updated : 26 Oct 2014 02:06 PM
பவானி மற்றும் காவிரியின் கிளை நதிகளில் தடுப்பணைகள் கட்டப்படாததால், ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் சராசரியாக 25 டிஎம்சி நீர் வீணாகக் கடலில் கலந்து வருகிறது. இதைத் தவிர்க்க பவானிசாகரில் இருந்து கூடுதுறை வரை 7 தடுப்பணைகளை கட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குந்தாவில் தோன்றும் பவானி ஆறு, கேரளா வுக்குள் சென்றுவிட்டு, பின் நீலகிரி மாவட்டம் வழியாக மேட்டுப் பாளையத்தை அடைகிறது. அங் கிருந்து சமவெளியில் பயணிக்கும் பவானி ஆறு, பவானிசாகர் அணைக்கட்டை வந்தடைகிறது. காவிரியின் துணை நதிகளில் ஒன்றான பவானி ஆறு, கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
பருவ மழைக் காலங்களில் நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாது, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பெய்யும் மழை நீர், பவானி ஆற்றில் கலந்து பவானிசாகர் அணையை அடைகிறது. பவானிசாகர் அணைக் கட்டிலிருந்து கூடுதுறை வரையிலான 80 கி.மீ. தூரத்தில் ஆற்றுப்பகுதியை ஒட்டியுள்ள பெரியகுளம், பெரும்பள்ளம், குண்டேறி பள்ளம், கம்பத்ராயன் பள்ளம், வேலபாறை, கரும்பாறை, தண்ணீர் பந்தல் பள்ளம் என 14 பள்ளங்கள் வாயிலாக, மழைக்காலங்களில் பெருமளவு நீர், பவானி ஆற்றின் வழியாக காவிரி ஆற்றில் சேர்கிறது.
பொதுவாக, பருவமழைக் காலங்களில், காவிரி டெல்டா பகுதிகளிலும் மழை பெய்வதால், காவிரி நீர் பயன்பாடு அங்கும் குறைந்துவிடும் நிலையில், மொத்த மழை நீரும் வீணாகக் கடலில் கலந்து வருகிறது. இதைத் தவிர்க்க பவானிசாகர் அணையில் இருந்து கூடுதுறை வரை 10 கி.மீ தூரத்துக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
இவ்வாறு கட்டப்படும் ஒவ்வொரு தடுப்பணையிலும் 0.25 டிஎம்சி நீரை தடுக்க முடியும். தடுப்பணை மூலம் மழைநீரைத் தேக்கினால், சத்தியமங்கலம், கோபி, அத்தாணி, தளவாய்பட்டனம், பவானி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் ஐந்து கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும், ஏழு பேரூராட்சி மற்றும் 22 ஊராட்சிகளுக்கும் குடிநீர் தேவையை தீர்க்க உதவியாக இருக்கும். மேலும், ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலம் மறைமுகமாகவும், 50 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாகவும் பாசனம் பெறும். இப்பகுதியில் நிலத்தடி நீரும் மேம்படும்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் முறைசாரா நீர் தேக்கம் மற்றும் தடுப்பணை குழுவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், 2011-ம் ஆண்டு ஆய்வு நடத்தினர். முடிவில், ஐந்து இடங்களில் தடுப்பணை கட்டலாம் என தெரிவித்தனர். அதன்பிறகு இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது என்கின்றனர் விவசாயிகள்.
பவானி ஆறு தொடங்கும் இடத்திலிருந்து, பவானிசாகர் அணைக்கு வருவதற்கு முன்பாக, 14 கதவணைகள் உள்ளன. இதன்மூலம் பெருமளவு மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல், அணைக்கு பின்பும் தடுப்பணை, கதவணை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.
இதுகுறித்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனசபைத் தலைவர் தளபதி கூறும்போது, பவானி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற எங்கள் நீண்ட நாள் கோரிக்கையை அரசு செவி சாய்க்காமல் இருப்பதால், ஏராளமான நீர் வீணாகக் கடலில் கலந்து வருகிறது. நேற்று மட்டும் காலிங்கராயன் அணையை தாண்டி, 3200 கன அடி நீர் காவிரி ஆற்றில் கலந்துள்ளது.
இது போன்று நொய்யல், அமராவதி ஆறுகளில் இருந்து வெளியேறும் உபரி நீரும் காவிரியில் கலக்கும் நிலையில், மேட்டூர் அணை திறக்கப்படாமலே, கல்லணைக்கு 30 ஆயிரம் கன அடி நீர் வருவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை முழு பயனை காவிரி டெல்டா மாவட்டங்கள் பெற்று விடுகின்றன. அவர்களுக்கு இந்த நீர் தற்போது தேவையில்லை. கடந்த ஆண்டு மட்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் 27 டிஎம்சி நீர் கடலில் வீணாக கலந்தது.
இது தொடர்கதையாக தொடராமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT