Published : 22 Feb 2017 12:12 PM
Last Updated : 22 Feb 2017 12:12 PM
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அரசு திட்டங்கள், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம், பெயர் ஆகியவற்றை பயன்படுத்துவது பற்றி புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது முதல் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட அவரது மேசையில் ஜெயலலிதா படம் இருந்ததை பலரும் கவனித்திருப்பார்கள்.
இது குறித்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர், எம்.ஜி.தேவசகாயம் கூறும்போது, இத்தகைய சூழ்நிலை ‘அருவருப்பானது, வெறுப்படையச் செய்வது’ என்று கூறினார். அரசியல் சாசனச் சட்டத்தை வடிவமைத்தவர்கள் குற்றவாளிகள் புகைப்படங்களை அரசு அலுவலகங்களை வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.
சட்டத்தில் இதற்குத் தடையில்லை:
பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இது குறித்து கருத்து தெரிவித்த போது, சட்டமோ, கோர்ட்டோ ஜெயலலிதா படங்களைப் பயன்படுத்த தடை விதிக்கவில்லை என்றார்.
2014-ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளி என்று தீர்ப்பளித்த பிறகு திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா அரசு திட்டங்களிலும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரின் படத்தை பயன்படுத்துவது குறித்து வழிகாட்டுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் இதிலும் தீர்வு கிட்டவில்லை. கர்நாடகா உயர் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு ஜெயலலிதா மீண்டும் பதவிக்கு திரும்பினார்.
ஜெயலலிதா படங்களை பயன்படுத்துவதில் தவறில்லை என்று கூறும் பால்வளத்துறை தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அபாயகரமான ஒரு ஒப்பீட்டைச் செய்து கேள்வி எழுப்பினார். “மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அன்று பிரிட்டீஷாரால் சட்டத்தை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டவர்கள்தானே? நாம் அவர்கள் படத்தை அலுவலகங்களில் வைத்துக் கொள்வதில்லையா?” என்று கேட்கிறார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சமூக செயல்பாட்டாளரும் லோக் சத்தா மாநில கிளையின் முன்னாள் தலைவருமான டி.ஜெகதீசன் கூறும்போது, மகாத்மா காந்தியும், நேதாஜியும் ஊழல் விவகாரத்தில் சிறையில் அடைக்கப்படவில்லை, எதிர்ப்பு, போராட்ட அரசியலுக்காக அவர்களை சிறையில் அடைத்தனர், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT