Published : 09 Jan 2014 12:00 AM
Last Updated : 09 Jan 2014 12:00 AM

கட்டாய கல்வி உரிமை சட்டத்தை 10 சதவீத பள்ளிகள் கூட பின்பற்றவில்லை: ‘இந்து அரசியல் மற்றும் பொதுக்கொள்கை மையம்’ நடத்திய நிகழ்ச்சியில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி வருத்தம்

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை 10 சதவீத பள்ளிகள்கூட பின்பற்றவில்லை என்று முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி கூறியுள்ளார்.

தி இந்து குழுமத்தின் ஓர் அங்கமான ‘இந்து அரசியல் மற்றும் பொதுக்கொள்கை மையம்’ சார்பில் ‘இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் பின்பற்ற வேண்டிய உத்திகள், ஏற்படும் தடைகள், உருவாகும் விளைவுகள்’ குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது. இந்த கலந்துரையாடலை நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி நெறிப்படுத்தினார்.

இதில், ஹார்வேர்டு நிர்வாகவியல் கல்லூரியின் உதவி பேராசிரியர் அக்சய் மங்லா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) தமிழ்நாடு திட்ட இயக்குநருமான எம்.பி.விஜயகுமார், கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், ‘எய்டு இந்தியா’ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி பாலாஜி சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் வி.வசந்தி தேவி பேசியதாவது:

21-ம் நூற்றாண்டில் வல்லரசாக வேண்டும் என்ற கனவோடு இந்தியா செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில், நம் நாட்டில் லட்சக்கணக்கான குழந்தைகள் கல்வி பெற முடியாத நிலையில் இருந்துகொண்டிருக்கிறார்கள். பொதுக்கல்வி முறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) கல்விக்கு 6 சதவீத நிதி ஒதுக்கீடு, அனைவருக்கும் தரமான கல்வி என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகளை கடந்த 1966-ல் கோத்தாரி கமிட்டி அரசுக்கு முன்வைத்தது. ஆனால், இன்றுவரை அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்தபாடில்லை.

6 வயது முதல் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகள் கல்வி பெறுவதை உரிமையாக்கி இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதன் இலக்கு இன்னும் நிறைவேறவில்லை. 10 சதவீத பள்ளிகள்கூட இந்த சட்டத்தை நடை முறைப்படுத்தவில்லை என்பது வருந்தத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் இலவசமாக கல்வி வழங்கப்படுகிறது. ஆனால், இதைவிட்டு பணம் செலுத்தி படிக்கும் தனியார் பள்ளிகளைத்தான் பெற்றோர் நாடுகிறார்கள். தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் ஆங்கிலவழி வகுப்புகள் தான் இதற்குக் காரணம். அரசுப் பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் கல்வியை தரம் குறைந்த கல்வி என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

எஸ்.எஸ்.ராஜகோபாலன் பேசுகையில், “அனைத்து ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற அரசியல் துணிவு அவசியம். முன்னாள் முதல்வர் காமராஜரிடம் அந்த துணிவு இருந்தது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் 98 சதவீத பள்ளிகள் அரசு பள்ளிகள்தான். ஆனால், இப்போது சமூக, பொருளாதார நிலைக்கு ஏற்ப, குழந்தைகள் வெவ்வேறு மாதிரியான பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள். இதனால், பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. அனைவருக்கும் தரமான கல்வி அளிக்க வேண்டியது அரசின் தலையாய கடமை” என்றார்.

பாலாஜி சம்பத் பேசுகையில், “பெரிய பள்ளிகளில் ஏழைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு என்ற ஒரு கருத்துத்தான் கட்டாயகல்வி உரிமைச் சட்டத்தில் பெரிதாக பேசப்படுகிறது. அனைத்து பள்ளிகளையும் தேசிய மயமாக்க வேண்டும்” என்றார்.

எம்.பி.விஜயகுமார் பேசுகை யில், “நாடு முழுவதும் 18.6 கோடி குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்காக ரூ.1.36 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. ஆசிரியரை மையப்படுத்தி இல்லாமல் குழந்தைகளை மையப்படுத்தி வகுப்பறை கல்வி அமைந்திருக்க வேண்டும்” என்றார்.

நீதிபதி கே.சந்துரு

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசுகையில் “மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி 1975 எமர்ஜென்சிக்குப் பிறகு பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. ஏராளமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தொடங்குவதற்கு அங்கீகாரம் அளித்து விட்டு இப்போது ஆசிரியர்களை தேர்வுசெய்ய தகுதித்தேர்வு நடத்து கிறார்கள். கல்வி நிர்வாகத்தை உள் ளாட்சிவசம் ஒப்படைக்க தமிழக அரசு விரும்பவில்லை. அரசு பள்ளிகளில் பெயரளவுக்குத்தான் மாணவர் சேர்க்கை அதிக எண்ணிக்கையில் காட்டப்படுகிறது” என்றார்.

முன்னதாக, இந்து அரசியல் மற்றும் பொதுக்கொள்கை மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வி.எஸ்.சம்பந்தன் வரவேற்று அறிமுகவுரை ஆற்றி னார். நிறைவாக, தலைமை அரசி யல் ஒருங்கிணைப்பாளர் எம்.ஆர்.வெங்கடேஷ் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x