Published : 02 Mar 2014 12:31 PM
Last Updated : 02 Mar 2014 12:31 PM
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக 927 நாட்களாக இடிந்தகரையில் போராட்டத்தை வழி நடத்திய, அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்க போராட்ட குழு நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சியில் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும், மை.பா. ஜேசுராஜும் இணைந்ததை அடுத்து இது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி இடிந்தகரையில் தொடர் போராட்டம் தொடங்கப்பட்டது. இந்த போராட்டம் கடந்த 2012-ல் செப்டம்பர் 10,11,12-ம் தேதிகளில் மிகத்தீவிரமாக இருந்தது.
அணுஉலையை கடற்கரை வழியாக முற்றுகையிட சென்ற போது மக்களுக்கும் போலீஸா ருக்கும் மோதல் மூண்டு, தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு என்று பதற்றம் அதிகரித்தது. ஒருகட்டத்தில் போலீஸாரிடம் சரணடைய உதயகுமார் முடிவு செய்து, அதை மக்களிடமும் கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி தெரிவித்தார். அன்று இரவில் டெல்லியிலிருந்து வரும் முக்கிய தலைவர் முன்னிலையில் அவர் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் அந்த முடிவு கைவிடப்பட்டது. அன்று இரவு டெல்லியிலிருந்து இடிந்தகரைக்கு வந்த தலைவர் வேறு யாருமல்ல. புதுடெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால்தான். அவர்தான் உதயகுமாரிடம் பேசி சரணடையும் திட்டத்தை கைவிட செய்திருந்தார். அடுத்த நாள் (செப்டம்பர் 12) உதயகுமார் மீதான வழக்குகள் தொடர்பாக கூடங்குளம் போலீஸ் நிலையத்துக்கு அரவிந்த் கேஜ்ரிவால் சென்று விளக்கங்களைக் கேட்டறிந்தார். இதுபோல் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷணும் அப்போது இடிந்தகரைக்கு வந்திருந்தார்.
அரசியல் பிரவேசம்
கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி அரசியல் நிலைப் பாடு குறித்து ஆலோசிக்க இடிந்தகரையில் அனைத்து சமுதாய தலைவர்கள், ஆதரவு அமைப் பினரின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அரசியல் பிரவேசத்துக்கு அப்போது மீனவர்கள் பிரதிநிதிகள் மத்தியில் எதிர்ப்பு இருந்தது. அரசியல் நிலைப்பாடு எதுவுமின்றி போராட்டம் நடத்த வேண்டும் என்றுதான் தொடக்கத்தில் போராட்டக் குழுவும் மக்களும் தீர்மானம் செய்திருந்தனர்.
அணுஉலை எதிர்ப்பு போராட்டம் காரணமாக இப்பகுதி மீனவர்கள் பெரும் இழப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.போராட்டத்துக்கான செலவுக்காக இங்குள்ள மீனவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை அளித்து வருகிறார்கள். போலீஸாரின் கெடுபிடிகள், உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வெளியூர்களுக்கு சென்றுவர முடியாத நிலை, வெளிநாடுகளுக்கு தொழில் செய்ய பாஸ்போர்ட் கிடைக்காமல் அவதி என்றெல்லாம் பல்வறு நெருக்கடிகளுக்கு மத்தியில் போராட்டமும் நடத்தி வரப்பட்டிருந்தது.
ஒருபுறம் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் மறுபுறம் கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள முதலாவது அணுஉலையில் நாட்டிலேயே சாதனை அளவாக மின்னுற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில்தான் அரசியல் பிரவேச முடிவை போராட்டக் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் எடுத்தனர். ஆம் ஆத்மி கட்சியில் சேரும் முடிவு குறித்து கடந்த சில நாள்களாக இடிந்தகரையில் மீனவர் பிரதிநிதிகளுடன் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசித்து வந்தனர். இந்த முடிவுக்கு பெரும்பாலான மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அரசியலில் இணையும் முடிவை போராட்டக் குழு நிர்வாகிகளில் ஒருவரான புஷ்பராயன் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக போராட்டக் குழு நிர்வாகிகளிடையே கருத்துவேறுபாடு உருவாகி யிருக்கிறது
இந்நிலையில் உதயகுமாரும், மை.பா. ஜேசுராஜும் ஆம் ஆத்மி கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந் தனர். புஷ்பராயன், முகிலன் ஆகிய நிர்வாகிகள் இணையவில்லை. வழக்கமாக இடிந்தகரையில் போராட்டம் நடைபெறும் லூர்து மாதா ஆலய பந்தலில்தான் உதயகுமார் செய்தியாளர்களைச் சந்திப்பார். எந்த நிகழ்வும் அங்குதான் நடைபெறும். ஆனால் கட்சியில் சேரும் நிகழ்ச்சி 500 மீட்டர் தொலைவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய வளாகப் பகுதியில் நடைபெற்றிருந்தது. அரசியல் கட்சியில் இணையும் முடிவை மேற்கொண்டுள்ளதால் இடிந்தகரையிலிருந்து வெளி யேறுமாறு உதயகுமாரை மீனவர் பிரதிநிதிகள் வற்புறுத்தியிருப் பதாகவும், அதற்கு 10 நாள் அவகாசத்தை உதயகுமார் கேட்டிருப்பதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக போராட்ட குழு நிர்வாகிகளில் ஒருவரான மை.பா. ஜேசுராஜிடம் பேசியபோது, போராட்ட குழு நிர்வாகிகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதை ஒத்துக்கொண்டார். அவ்வாறு கருத்துவேறுபாடு ஏற்படுவது இயல்புதானே என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாகவே அரசியல் கட்சியில் இணைந்துள்ளதை பார்க்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறோம். அரசியல் கட்சியில் சேரும் முடிவு போராட்ட குழுவில் உள்ளவர்கள் எடுத்ததுதான். மக்கள் ஒத்துழைப்புடன்தான் கட்சியில் சேர்ந்திருக்கிறோம். போராட்டக் குழுவில் பிளவு என்பது இல்லை. காங்கிரஸும், பாஜகவும் அணுஉலைக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் எங்களுக்காக பேசுவதற்கு ஆம் ஆத்மி கட்சியைத் தேர்ந்தெடுத் திருக்கிறோம் என்றார். இதுதொடர் பாக தற்போதைக்கு எதையும் தெரிவிக்க விரும்ப வில்லை என்று எஸ்.எம்.எஸ். மூலம் புஷ்பராயன் தகவல் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT