Published : 31 Jul 2016 02:08 PM
Last Updated : 31 Jul 2016 02:08 PM

கச்சத்தீவில் புதிய அந்தோனியார் ஆலயம்: தமிழக மீனவர்களின் பங்களிப்பு இல்லாமல் கட்டும் பணிகள் தீவிரம்

தமிழக மீனவர்களின் பங்களிப்பு இல்லாமல் கச்சத்தீவில் புதிய அந்தோனியார் ஆலயம் கட்டும் பணிகள் மூழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

285 ஏக்கரிலான கச்சத்தீவு, ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக்ஜலசந்தி’ கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேசுவரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம்.

கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். இதற்காக ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சார்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியை சார்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கடந்த 1913ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோனியார் ஆலயம் நிறுவப்பட்டது.

கச்சத்தீவு ஒப்பந்தம்

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மண்டபம் மரைக்காயர்கள் குத்தகைக்கு எடுத்து முத்துக்கள் மற்றும் மீன்பிடிக்காக பயன்படுத்தி வந்தனர். 08.07.1974 அன்று இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவுக்கு தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத்தீவை எழுதிக் கொடுத்தார். இந்த கச்சத்தீவு ஒப்பந்தப்படி அங்குள்ள புனித்அந்தோணியார் கோவில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. 1983 ஆம் முதன்முதலாக இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டு போர் முடிவுற்றப் பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் கச்சத்தீவு திருவிழா தொடர்ந்து ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கடந்த மே 8 அன்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் கச்சத்தீவில் இலங்கை அரசு சார்பில் ரூ. 1 கோடி மதிப்பில் புதிய அந்தோனியார் தேவாலயம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி, ஆலயத்திற்கான கட்டட வேலைகளை அனைத்தையும் நெடுந்தீவு ஆயர் ஜெயரஞ்சன் மேற்பார்வையில் இலங்கை கடற்படையினரே மேற்கொள்ள உள்ளனர், என அறிவித்தார்.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தை இலங்கை அரசு தன்னிச்சையாக இடிக்க முடிவு செய்திருப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தமிழக மீனவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் இந்தியாவும், இலங்கையும் கூட்டாகச் சேர்ந்து, தேவாலயத்தை மீண்டும் கட்டுவதற்கு இலங்கை அரசை சம்மதிக்கச் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதன் பின்னர் கச்சத்தீவு தேவாலய கட்டுமானப்பணிகள் இந்தியாவின் அழுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்காமல் தமிழக மீனவர்களின் பங்களிப்பு இல்லாமல் கச்சத்தீவில் புதிய தேவாலயம் கட்டும் பணிகள் மூழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை ஆயர் ஜோசப்தாஸ் கச்சத்தீவு முற்றிலுமாக இலங்கைக்குச் சொந்தமான தீவு. இதில் புதிய தேவாலயம் கட்டுவதற்கு இந்தியாவின் அனுமதி தேவையில்லை. கச்சதீவு ஒப்பந்தத்தின்படி ஏற்கெனவே அங்கிருந்தபடி கிறிஸ்தவ தேவாயம் மட்டுமே கட்ட முடியும். கடற்படை அல்லது ராணுவ முகாமோ கட்ட முடியாது. 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு முன்னர் புதிய தேவாலயம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x