Published : 13 Jul 2016 07:59 AM
Last Updated : 13 Jul 2016 07:59 AM
சூளைமேட்டில் உள்ள திருவள்ளுவர்புரத்தில் மின் இணைப்பு பெட்டி ஒன்று 4 ஆண்டுகளாக கதவுகள் இல் லாமல் உள்ளது. இந்த பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒரு பூனை பலியானதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
சூளைமேடு திருவள்ளுவர் புரத்தில் உள்ள மின் இணைப்பு பெட்டி கடந்த 4 ஆண்டு களாக துருப்பிடித்து கதவுகள் இல்லாமல் உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் போது அந்த மின் இணைப்பு பெட்டி தரையோடு தரையாக திறந்தே கிடந்தது. இருப்பினும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது. பாதுகாப்பில்லாமல் இருக்கும் அந்த மின் இணைப்பு பெட்டி வெள்ள பாதிப்புக்கு பிறகும் மாற்றப்படாமல் உள்ளது.
இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான கமலக்கண்ணன் கூறும்போது, “கதவு இல்லாமல் திறந்து கிடக்கும் மின் இணைப்புப் பெட்டியில் காற்றடிக்கும்போது குப்பைகள் போய் ஒட்டிக் கொள்ளும். அப்போது தீப்பொறி பறக்கும். வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பிடிக்கும். சிறிது நேரத்தில் மின் விநியோகம் நின்றுபோய்விடும். இதுபற்றி புகார் கொடுத்தால் மின் ஊழியர்கள் பலமணி நேரம் கழித்து வந்து அதை பெயரளவில் சரிசெய்வார்கள். ஓரிரு நாளில் இதே பிரச்சினை மீண்டும் ஏற்படும். இதுபற்றி மின்துறை உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை” என்றார்.
அண்மையில் இந்த மின் இணைப்புப் பெட்டியை கடந்து சென்ற ஒரு பூனை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதைப் பார்த்ததும் அப்பகுதி மக்கள், தங்களுக்கும் அதுபோன்ற அசம்பாவிதம் நேருமோ என்ற பீதியில் உள்ளனர். இப்பகுதியில் புதிய மின் இணைப்பு பெட்டியை அமைக்காமல் இருப்பது பற்றி மின்வாரிய உயர் அதிகாரியைக் கேட்டபோது, “கைவசம் இப்போது புதிய பெட்டிகள் இல்லை. அடுத்த கருத்துரு அனுப்பி, புதிய பெட்டி வந்ததும் மாற்றித் தருகிறோம்” என்றனர்.
சென்னையில் தற்போது அடிக்கடி மழை பெய்துவரும் நிலையில் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் மின் இணைப்புப் பெட்டியால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பே அதை மாற்றித்தர வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இந்த மின் இணைப்புப் பெட்டிக்கு அருகே உள்ள மின் கம்பம் 7 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் நின்று கொண்டிருக்கிறது. தெருவில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள இந்த மின் கம்பத்தையும் அப்புறப்படுத்த வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT