Published : 23 Dec 2014 08:58 AM
Last Updated : 23 Dec 2014 08:58 AM
திருச்சி மாநகர காவல்துறையினர் பொய் வழக்குப் போடுவதாகக் கூறி நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது இளைஞர் காவல் படையைச் சேர்ந்தவரை சுற்றி வளைத்து வழக்கறிஞர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் தொழிலதிபர் ஒருவரை மிரட்டியதாக ரவுடி குணா மற்றும் வழக்கறிஞர் ராஜேந்திர குமார் உள்ளிட்ட சிலர் மீது திருச்சி கோட்ட காவல் நிலைய போலீ ஸார் அண்மையில் வழக்குத் தொடர்ந்தனர். ராஜேந்திரகுமார் மீது பொய் வழக்கு போட்டதாகக் கூறி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் தலைவர் ஜேசு பால்ராஜ் தலைமையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக காவல்துறை உதவி ஆணையர் கணேசன் போலீஸ் ஜீப்பில் வந்தார். ஜீப்பை இளைஞர் காவல் படையைச் சேர்ந்த திலக் என்பவர் ஓட்டி வந்தார். உதவி ஆணையர் கணேசன் உண்ணாவிரதம் நடந்த இடத்தில் இறங்கிக்கொண்டதும், ஜீப்பை நீதிமன்ற வளாகத்துக்குள் எடுத்துச் செல்ல முற்பட்ட திலக், நெரிசல் ஏற்பட்டதால் ஹாரன் அடித்துள்ளார். இதனால் உண்ணா விரதப் போராட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுநர் திலக்கை திட்டினராம்.
ஜீப்பை கன்டோன்மென்ட் காவல் நிலையம் அருகே நிறுத்தி விட்டு, இந்த வேலையே வேண்டாம் என முடிவு செய்த திலக், தனது காக்கிச் சீருடையை கழற்றி வைத்துவிட்டு, ஜீப் சாவியை உதவி ஆணையர் கணேச னிடம் அளிப்பதற்காக உண்ணா விரதப் பந்தல் அருகே வந்தாராம்.
அப்போது, திலக்கை அங்கிருந்த வழக்கறிஞர்கள் சுற்றி வளைத்து தாக்கினர். அவரும் தன்னை பாதுகாத்துக்கொள்ள எதிர்தாக்குதல் நடத்தினார். இந்த மோதலில் திலக்கின் சட்டை கிழிந்தது. உதட்டில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. வழக்கறிஞர்களை சமாதானப்படுத்த முயன்ற உதவி ஆணையர் கணேசனின் முயற்சி பலனளிக்கவில்லை. தகவல் அறிந்து வந்த மற்ற போலீஸார் வழக்கறிஞர்களிடமிருந்து திலக்கை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்தில் ஏராள மான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியாக புகார் அளிக்க உள்ளதாக கூறப் படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT