Published : 16 Sep 2013 05:23 PM
Last Updated : 16 Sep 2013 05:23 PM

தகவல் தொழில்நுட்பத்தில் அபார சாதனை

தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றால் அது மிகையில்லை. சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த நிறுவனங்கள் ஏறத்தாழ 2 ஆயிரம் உள்ளன. இவற்றில் சுமார் 4 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கேற்ப, தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற பொறியாளர்கள், தகவல்தொழில்நுட்ப நிபுணர்கள் அதிக அளவில் கிடைக்கின்றனர்.

அறிவுசார் பணிகளுக்கு அதிக அளவு வாய்ப்பு இருப்பதால் அன்னிய நேரடி முதலீடும் குவிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெற தகவல் தொழில்நுட்பத் துறை பெரிதும் துணைபுரிந்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையால் சாப்ட்வேர், நிதிச்சேவை, வங்கி, காப்பீடு, சுகாதார மேலாண்மை, கணினிசார்ந்த வடிவமைப்பு போன்ற துறைகளும் அபார வளர்ச்சி பெற்று வருவதால் தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சியிலும் தமிழகம் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு இத்துறைக்கென தனிக்கொள்கையை கடந்த ஆண்டு வெளியிட்டது. பொதுமக்களுக்கு ஆன்லைன் மூலம் விரைவாக அரசு சேவை கிடைக்கச் செய்வது, தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைப்பது, இ-கவர்னன்ஸ் எனப்படும் மின்-ஆளுமையில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவது, சாப்ட்வேர் ஏற்றுமதியை அதிகரிப்பது ஆகியவை இக்கொள்கையின் பிரதான நோக்கங்கள்.

சாப்ட்வேர் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் தகவல்தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

அரசின் பல்வேறு சேவைகள், உதவிகள் ஆகியவை மக்களுக்கு ஆன்லைன் மூலம் அவர்களது இருப்பிடத்திலேயே கிடைக்க வேண்டும் என்பதற்காக மின்-ஆளுமை திட்டத்தை தமிழக அரசு முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. அரியலூர், பெரம்பலூர், கோவை, திருவாரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களிலும் இத்திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. மின்-ஆளுமை திட்டம் குறித்து அரசு ஊழியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு சேவைகள் பொதுமக்களை விரைவாக சென்றடைவதற்காக தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் அரசு அலுவலகங்களில் பிராட்பேண்ட் அதிகவேக இணைய வசதி செய்து தரப்பட்டுள்ளது. மின்ஆளுமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் அரசு துறைகளை ஊக்குவிக்கும் வகையில் ’முதல்வர் மின்-ஆளுமை விருது’ புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்-ஆளுமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு ’வெப் ரத்னா’ என்ற விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வருவாய்த் துறை சான்றிதழ்களை வழங்குவது, சமூகநலத் துறையின் திருமண உதவித்தொகை தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) மூலம் தகவல் அனுப்புவது உள்பட 10 விதமான சேவைகளை மின்-ஆளுமை திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

நீதி மட்டுமல்ல.. நிதியும் தாமதமானால் மறுக்கப்பட்டதற்கு சமமானதே. அந்த நிலை ஏற்படாமல், அரசு வழங்கும் திட்டங்கள், சேவைகள், உதவிகளை உடனுக்குடன் மக்களின் கையில் கொண்டு சேர்க்கும் மைல்கல் திட்டமாக மின்-ஆளுமை திட்டம் விளங்கி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x