Published : 15 Feb 2017 08:34 AM
Last Updated : 15 Feb 2017 08:34 AM
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்த சம்பவத்தை அடுத்து எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூரில் அடுத்தடுத்து பரபரப்பு காட்சிகள் அரங்கேறின.
அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவை பெறுவதற்காக, கல்பாக் கம் அடுத்த கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் 7-வது நாளாக அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக் காததால், சசிகலா கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக் களுடன் 3 முறை ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் கூவத்தூர் வந்த சசிகலா சென்னைக்கு திரும்பாமல் எம்எல்ஏக்களுடன் விடுதியிலேயே தங்கினார்.
சசிகலா கூவத்தூர் விடுதியில் தங்கியதை தொடர்ந்து, அப்பகுதி யில் காஞ்சிபுரம், கடலூர், திருவள் ளூர், விழுப்புரம், திருவண்ண மலை ஆகிய மாவட் டங்களின் எஸ்பிக்களின் தலைமை யில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
1,500 போலீஸார்
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தில் காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, 11 மணியளவில் வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைக்கண்ணன் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீஸார் விடுதிக்கு சென்றனர். இதனால், கூவத்தூரில் உச்சக்கப்பட்ட பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
கூவத்தூர் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டு, சென்னை யிலிருந்து வரும் வாகனங்கள் கூவத்தூர் அடுத்த காத்தான் கடையிலிருந்து நெற்குணப்பட்டு வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதேபோல், பாண்டிச்சேரியிலிருந்து வந்த வாகனங்களும் திருப்பிவிடப் பட்டன. இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
விடுதியின் உள்ளே போலீஸார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன் தலைமையில் வருவாய்த் துறையி னர் சென்றனர். போலீஸார் குவிக் கப்பட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த சசிகலா தரப்பினர் விடுதியை விட்டு வெளியேறினர். டிஎஸ்பி பாலச்சந்திரன் தலைமை யில் விடுதி வளாகம் முழுவதும் சந்தேகத்துக்கிடமான வகையில் யாரேனும் தங்கியுள்ளனரா என சோதனை நடத்தினர்.
இதேபோல், ஏடிஎஸ்பி தமிழ் செல்வன் தலைமையிலான போலீஸார் அமைச்சர்களின் காரில் சோதனையிட்டனர். இதில், காரில் மர்மநபர்கள் சிலர் பதுங்கியிருப்பது தெரிந்தது. இவர்களை, உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் விடுதியிலிருந்து வெளியேற்றினர்.
இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன், எஸ்பி முத்தரசி, கடலூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் ஆகியோர் விடுதி வளாகத்தில் சில நிமிடங்கள் ஆலோசனை செய்தனர். பின்னர், சசிகலா மற்றும் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த கட்டிடத்திலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியே வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம், அதிமுக சட்ட மன்ற குழு தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்து விட்டு சென்றார்.
பின்னர், சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு செங்கோட்டையன் விடுதி வளாகத்தில் காத்திருந்த செய்தியாளர்களை நேரடியாகச் சந்தித்தார். அப்போது, அதிமுக சட்டப்பேரவைக் குழுத்தலைவராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதற்கான ஆவணத்தை காண்பித்தார். பின்னர், அவர் மீண்டும் விடுதியின் உள்ளே சென்றார்.
சில நிமிடங்களில் 8 எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். இதில், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுகவின் சட்டமன்றக் குழுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை நேரில் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவதாகவும் தெரிவித்து விட்டு விடுதிக்குள் சென்றார்.
ஆலோசனை
இதை தொடர்ந்து, சுமார் ஒருமணி நேரத்துக்கு பிறகு ஆலோசனை கூட்டம் நடைபெற்ற கட்டிடத்திலிருந்து அமைச்சர்களுடன் சசிகலா வெளியே வந்தார். அங்கிருந்து நேராக எதிரே உள்ள மற்றொரு கட்டிடத்தின் உள்ளே சென்றார். சிறிது நேரத்துக்கு பிறகு அமைச்சர்கள் ஜெயக்குமார், வியஜபாஸ்கர், சரோஜா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர், சுழல் விளக்குகள் பொருத்திய 4 கார்களில் ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
இதையடுத்து, சசிகலா தங்கியுள்ள கட்டிடத்தின் முகப்பு பகுதியில் அவரது கார் எப்போது வேண்டுமானாலும் புறப்படும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரேனும் கலவரத்தில் ஈடுபடக்கூடும் எனக் கருதிய போலீஸார், அவர்களை கைது செய்து அழைத்து செல் வதற்காக 6 அரசுப் பேருந்துகளை விடுதியின் முகப்பு பகுதியில் தயார் நிலையில் வைத்தனர். 500 போலீஸார் விடுதியின் முகப்பில் குவிக்கப்பட்டனர். இதனால், கூவத்தூர் கிராமத்தில் உச்சக் கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 144 தடை உத்தரவைத் தொடர்ந்து பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT