Published : 18 Mar 2014 08:30 AM
Last Updated : 18 Mar 2014 08:30 AM

சொந்த நலன்களுக்காக மத்தியில் வாஜ்பாய் அரசை கவிழ்த்தவர் ஜெயலலிதா: திமுக தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு

சொந்த நலன்களுக்காக வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசை கவிழ்த்தவர் ஜெயலலிதா என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை வெற்றி பெறச் செய்த கருணாநிதி, அதைத் தடை செய்ய பாடுபடுவோம் என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறார். சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தன்னலத்துக்காக தன்னை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி போன்ற கருணாநிதி என்று என்னை ஜெயலலிதா கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, முடிந்த அளவுக்கு தோழமைக் கட்சியோடு அனுசரணையாக நடந்து கொண்டோம். அதேநேரத்தில், இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு எல்லை கடந்து நடந்து கொண்ட நேரத்தில், கூட்டணியை விட்டு விலகி வரவும் நாங்கள் தயங்கவில்லை.

ஆனால், 1998-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய ஆதரவுக் கடிதத்தைக்கூட வேண்டுமென்றே தாமதம் செய்து முரண்டு பிடித்தார்.

திமுக அரசைக் கலைக்க வேண்டும், தன் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். முன்னாள் தலைமைச் செயலாளர் அரிபாஸ்கரின் சஸ்பெண்டை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பன போன்ற பல சிபாரிசுகளை தன் கைப்படவே எழுதிக் கொடுத்திருந்தார்.

சொந்த நலனுக்காக எண்ணியதெல்லாம் முழுமையாக நிறைவேறவில்லை என்பதால் ஆத்திரப்பட்ட ஜெயலலிதா, பாஜக ஆட்சிக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்று, வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ காரணமாக இருந்தார். அதிமுகவுடன் கூட்டணி இருந்த காலம்தான் எனது அரசியல் வாழ்க்கையிலேயே மிகவும் வேதனையான காலமாகும் என்று வாஜ்பாயே கூறியிருந்தார்.

மீனவர்களுக்காக நான் எதுவும் செய்யவில்லை என்பதைப் போல தூத்துக்குடி கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருக்கிறார். இருநாட்டு மீனவர் பிரதிநிதிகளைச் சந்திக்க, தேதி குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் பதில் வரவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார். உண்மையிலேயே, மீனவர்களின் நலனில் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால், பிரதமரின் கடிதத்துக்கு பதிலெழுத 6 மாதங்கள் தாமதம் செய்திருப்பாரா? மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட போதெல்லாம், பிரதமருக்கு ஒரு கடிதத்தை எழுதிவிட்டு, அதை அவசர அவசரமாக ஏடுகளிலே விளம்பரப்படுத்திக் கொண்டால், மீனவர்களைப் பாதுகாப்பதாக அர்த்தமாகிவிடுமா?

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x