Published : 27 Apr 2017 10:50 AM
Last Updated : 27 Apr 2017 10:50 AM
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இளைஞர்கள் நடத்தும் ‘ஆலினோவ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் தேசிய அறிவுசார் சொத்துரிமை விருதை வென்று சாதனை படைத்துள்ளது.
மத்திய தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங் கும் இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகம், தேசிய அறிவுசார் சொத்துரிமை விருதுகளை வழங்குகிறது. உலக அறிவுசார் சொத்துரிமை தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் காப்புரிமை, வடிவமைப்பு, வர்த்தகக் குறியீடு, புவிசார் குறியீடு ஆகிய துறைகளில் சிறப்பான கண்டுபிடிப்பாளர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விருதுடன், ரூ.1 லட்சம் ரொக்கம், கேடயம் பரிசாக வழங்கப்படுகிறது.
அறிவுசார் சொத்துரிமை வர்த்தகமய மாக்கலில் சிறந்த புதிய நிறுவனம் என்ற பிரிவின் கீழ், 2017-ம் ஆண்டுக்கான தேசிய அறிவுசார் சொத்துரிமை விருது பெற, கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ஆலினோவ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிறுவன இயக்குநர்களான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிரேம் சார்லஸ், சுந்தர்பால் ஆகியோர் கூறியதாவது:
மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் 20-க்கும் அதிகமான பொருட் களை கண்டுபிடித்துள்ளோம். குறிப்பாக, வீட்டில் சமையல் காஸ் பயன்பாட்டை அளவிடும் கருவி, பயணத்தின்போது பயன்படும் வகையில் பற்பசையுடன் கூடிய பிரஷ், வாகனத்தில் ஹெல்மெட் பொருத்த பயன்படும் கருவி, ஷாப்பிங் மால்களில் தேவையான பொருட்களை எடுக்க பயன்படும் ட்ராலியிலேயே இணைக்கப்பட்ட பில் போடும் கருவி உள்ளிட்டவற்றை கண்டுபிடித்துள்ளோம். கருவிகள் அனைத்துக்கும் காப்புரிமை பெற்றுள்ளோம்.
250 புதிய கண்டுபிடிப்பாளர்கள்
தமிழகம், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் 3 கிளைகள் மூலம் 250 புதிய கண்டுபிடிப்பாளர்களைத் தேர்வு செய்து, பயிற்சி அளித்து வருகிறோம். புதிய கண்டுபிடிப்பாளர்களையும், தொழில் முனைவோரையும் உருவாக்குவதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
நமது நாட்டில் புதிய கண்டுபிடிப்பாளர்கள் நிறைந்துள்ளனர். காப்புரிமை, மதிப்பு, அடிப்படை சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு குறைவாக உள்ளதால், புதிய கண்டுபிடிப்புகள் பல வெளிநாடுகளுக்கு செல்லும்போது நமது கண்டுபிடிப்பைப் போன்ற போலி பொருட்களை உருவாக்கி நமக்கே விற்பனை செய்யும் நிலைதான் உள்ளது.
விழிப்புணர்வு
இதனைத் தடுக்கும் வகையில் ஒரு பொருளை எவ்வாறு உருவாக்கு வது, கண்டுபிடிப்பாளரின் காப்புரிமை மதிப்பு, சந்தை தேவை, வடிவமைப்பு, வாடிக்கையாளரின் தேவை நிலவரம் உள்ளிட்டவை தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரி கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
புதுடெல்லியில் 27-ம் தேதி (இன்று) நடைபெறும் தேசிய காப்புரிமை கருத்தரங்கில், எங்களது நிறுவனத்துக்கு வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதை வழங்குகிறார். இதற்கு முன்பு இவ்விருதுகளை டிசிஎஸ், ஐஐடி மும்பை, ஐஐடி கஹராபூர், சாம்சங் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. அவ்வரிசையில் நாங்களும் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT