Published : 14 Nov 2013 12:00 AM
Last Updated : 14 Nov 2013 12:00 AM
சென்னைக் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நகரில் குடிநீர் சப்ளை மற்றும் கழிவுநீர் வெளியேற்றும் அமைப்புகளைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள வீடுகள், குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றுக்கு ஒருநாள்விட்டு ஒருநாள் 68 கோடி லிட்டர் குடிநீர் சப்ளை செய்து வருகிறது. குழாய் மூலம் குடிநீர் சப்ளை இல்லாத இடங்களுக்கு சிறியதும், பெரியதுமான 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகின்றன.
அதுபோல, கழிவுநீர் அமைப்புகளில் அடைப்பு ஏற்படும்போது தூர்அள்ளும் பணிக்கு சிறியதும், பெரியதுமாக ஜெட்ராடிங் மிஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன.
புதிய கண்காணிப்பு மையம்
குடிநீர் சப்ளை மற்றும் கழிவுநீரகற்றல் பணிகளை ஒட்டுமொத்தமாகக் கண்காணிக்க ஜி.பி.எஸ்., ஜி.பி.ஆர்.எஸ். போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் விரைவில் பயன்படுத்தப்படவுள்ளன.
இதற்காக சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னைக் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் வாரிய தலைமை அலுவலகத்தின் தரைத்தளத்தில் நவீன கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் செயல்பாட்டுக்காக குடிநீர் லாரிகளில் பிளாக் பாக்ஸும், லாரிகளில் குடிநீர் ஏற்றும் இடங்களில் கண்காணிப்புக் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன.
சாட்டிலைட் மூலம் ஜி.பி.எஸ்.தொழில்நுட்பம், ஜி.பி.ஆர்.எஸ். என்ற செல்போன் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.
சோதனை ஓட்டம்
இவற்றின் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடந்தது. அப்போது கண்காணிப்பு மையத்தில் உள்ள பிரமாண்டமான எலக்ட்ரானிக் திரையில், குடிநீர் லாரிகள் போக்குவரத்து, பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஆகிய குடிநீர் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு, வெளியேற்றப்படும் நீரின் அளவு, குடிநீர் நீரேற்று நிலையங்கள், கழிவுநீரேற்று நிலையங்களில் உள்ள இயந்திரங்களின் செயல்பாடுகள் ஆகியவை துல்லியமாக கண்காணிக்கப்பட்டன. குடிநீர் லாரிகளின் இருப்பிடமும் சோதித்துப் பார்க்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இனிமேல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள இயந்திரங்களில் ஏதாவது ஒரு இடத்தில் பழுது ஏற்பட்டால்கூட சமிஞ்கை மூலம் உடனடியாக கண்காணிப்பு மையத்துக்குத் தகவல் கிடைக்கும். இம்மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.
கால்-சென்டர்
இம்மையத்தில்,பொதுமக்களின் குறைகளை தொலைபேசி மூலம் கேட்டறிந்து அவற்றை கணினியில் தானாகப் பதிவு செய்வதற்காக கால்-சென்டர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இனிமேல் பொதுமக்களின் குறைகள் பதிவேட்டில் எழுதிவைப்பதற்குப் பதிலாக, சர்வர் மூலம் கணினியில் தானாகப் பதிவாகிவிடும். எத்தனை நாட்களில் குறைகள் சரிசெய்யப்படும் என்பது போன்ற தகவல்களும் தெரிவிக்கப்படும். என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT