Published : 28 Jan 2014 12:00 AM
Last Updated : 28 Jan 2014 12:00 AM

நவீன சாதனங்களை பயன்படுத்துவதில் தமிழக காவல்துறை முன்னோடி- ஜெயலலிதா பெருமிதம்

நவீன சாதனங்களையும், புதிய உத்திகளையும் பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழக காவல்துறை முன்னோடியாக திகழ்கிறது என்று அகில இந்திய அதிரடிப் படையினர் திறன் போட்டி நிறைவு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன் கூறினார்.

காவல் துறை போட்டி நிறைவு விழா

4-வது அகில இந்திய காவல் அதிரடிப் படையினர் திறன் போட்டி சென்னையை அடுத்த வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் ஜனவரி 22-ம் தேதி தொடங்கி 27ம் தேதி (திங்கள்கிழமை) முடிவடைந்து. இந்த போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. வெற்றிபெற்ற அணிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கிப் பேசியதாவது:

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அதிரடிப்படை (கமாண்டோ) பிரிவுகள் செயல்படுகின்றன. கமாண்டோ படையினரின் திறமைகளையும், உத்திகளையும் மேம்படுத்த தொடர் பயிற்சி மிகவும் அவசியம். தமிழகத்தில் காவல் துறையினருக்கு ஊக்கமும், தேவையான பயிற்சிகளும், நவீன சாதனங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

முழு சுதந்திரம்

நவீன சாதனங்களையும், புதிய உத்திகளையும் பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழக காவல்துறை முன்னோடியாக திகழ்கிறது. தீவிரவாத தாக்குதலை எதிர்கொண்டு முறியடிப்பது, பிணைக் கைதிகளை மீட்பது, தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்துவது என தமிழக கமாண்டோ படையினருக்கு அனைத்து விதமான நவீன பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு திறமையுடன் பணிபுரிகிறார்கள். இதைப் பார்த்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

அதிரடிப் படையினர் சாகசம்

அண்மையில் ஆந்திர மாநிலம் புத்தூரில் தமிழக அதிரடிப் படை போலீசார் தீவிரவாதி பக்ருதீனையும், இரு கூட்டாளிகளையும் எவ்வித உயிர்ச்சேதமும் இல்லாமல் கைதுசெய்தனர். இது நாட்டிலேயே நமது கமாண்டோ படை சிறந்த படை என்பதற்கு உதாரணம். அந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட 260 போலீசாரையும் நேரில் பாராட்டி அவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வெகுமதி வழங்கியதுடன் 20 பேருக்கு விரைவு பதவி உயர்வும் அளித்தேன்.

காவல் துறையினர் விளையாட்டுகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்று தமிழகத்துக்கு பெருமை தேடித்தரும் போலீசாருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

பரிசுத் தொகை அதிகரிப்பு

அகில இந்திய போலீஸ் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெறும் போலீசாருக்கான பரிசுத் தொகை 10 மடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், போட்டிகளில் வெற்றிபெறும் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்தால் ரூ.30 ஆயிரமும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

விழாவில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, மத்திய இன்டலிஜென்ஸ் பீரோ கூடுதல் இயக்குநர் மலாய்குமார் ஆகியோரும் பேசினர். முன்னதாக, போலீஸ் டி.ஜி.பி. கே.ராமானுஜம் வரவேற்றார். நிறைவாக, கூடுதல் டி.ஜி.பி. (இயக்கம்) சஞ்சய் அரோரா நன்றி கூறினார். விழாவில் இடம்பெற்ற போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் வாத்தியம், யோகாசனம், கர்நாடக இசை, தமிழ்நாடு காவல் துறையினர் சிலம்பம் விளையாட்டு ஆகிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.

ஒட்டுமொத்த சிறந்த குழுவாக தமிழக காவல்துறை தேர்வு

நான்காவது அகில இந்திய காவல் அதிரடிப் படையினர் போட்டியில் அனைத்து வகையிலும் ஒட்டுமொத்த சிறந்த குழுவாக தமிழக காவல்துறை தேர்வு செய்யப்பட்டது. அதேபோல், தடை ஓட்டத்தில் சிறந்த குழுவாகவும், மாநில காவல் துறையில் சிறந்த குழுவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கான கேடயங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கி பாராட்டு தெரிவித்தார். அனிச்சை முறை துப்பாக்கிச் சுடுதலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையும் (சி.ஐ.எஸ்.எப்.), நகரச் சூழலில் இயங்குவதில் சிறந்த குழுவாக எல்லை பாதுகாப்பு படையும் தேர்வு செய்யப்பட்டு கேடயங்கள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x