Published : 08 Feb 2014 12:00 AM
Last Updated : 08 Feb 2014 12:00 AM
திருச்சி ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவின் மூலம் ரயில்நிலைய காத்திருப்பு அறையில் பெண்கள் உடை மாற்றுவது, குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதை கட்டுப்பாட்டு அறையிலிருந்த ரயில்வே பாதுகாப்புப்படை காவலர்கள் சிலர் படம்பிடித்து சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸ் முதன்மை பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடைபெற்றுள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரியும் முஸ்தபா கான், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா மூலம் ரயில் நிலையத்திற்கு வரும் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து பார்த்துக்கொண்டிருந்ததை அவருடன் பணிபுரியும் ஒரு காவலர் பார்த்துள்ளார்.
அவர் உடனடியாக ஆய்வாளர் பக்கிரிசாமிக்கு இண்டர்காமில் தகவல் தெரிவித்தார்.
4 மாதமாக விசாரணை
பின்னர், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காத நிலையில் இந்தப் பிரச்சினை குறித்து சென்னையிலிருக்கும் ரயில்வே பாதுகாப்புப்படை முதன்மை பாதுகாப்பு ஆணையருக்குப் புகார் சென்றுள்ளது.
முதன்மை பாதுகாப்பு ஆணையர் ஒரு விசாரணைக் குழுவை திருச்சிக்கு அனுப்பி கண்காணிப்புக் கேமரா இணைக்கப்பட்டுள்ள கணினி ஹார்ட் டிஸ்க், திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படையினரின் வருகைப் பதிவேட்டை எடுத்துச் சென்றுள்ளனர்.
அது மட்டுமல்லாமல் திருச்சி ரயில் நிலையத்தில் பணிபுரியும் பாதுகாப்புப்படை காவலர்களை ஒரு நாளைக்கு 2 பேர் என்று சென்னைக்கு விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். யார் இதை செய்தது என்று கடந்த 4 மாதங்களுக்கு மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் விசாரித்தபோது யாரும் பேசவே விரும்பவில்லை. ‘இதையெல்லாம் அதிகாரிங்க கிட்ட கேளுங்க’ என்றார்கள் சிலர்.
கேள்விக்குறியான பாதுகாப்பு…
தனியார் இடங்களில்தான் இப்படி கண்காணிப்புக் கேமரா மூலம் பெண்களைப் படம் பிடிக்கிறார்கள் என்றால், ரயில் நிலையம் போன்ற அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பொது இடங்களிலேயே இப்படி நடக்கிறது என்கிறபோது பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்பது கவலையளிப்பதாய் உள்ளது.
ஒருவரை சிக்கவைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அல்லது அவராகவே செய்திருந்தாலும் இது குற்றம்தான்.
அதை தீவிரமாக விசாரித்து குற்றம் செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் குற்றத்தை மூடி மறைக்காமல் வெளிப்படையான நடவடிக்கையில் இறங்குமா ரயில்வே பாதுகாப்புப்படை?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT