Published : 05 Dec 2013 10:16 AM
Last Updated : 05 Dec 2013 10:16 AM

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: வைகோ

தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:தமிழ் நாட்டில் மதுக்கடைகளை அகற்றக்கோரி பல்வேறு இடங்களில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் போராடிக்கொண்டிருக்கின்ற செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டிருக்கின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில்தான் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி, இலவசங்களை வாரி வழங்குவதன் மூலம் தமிழக அரசு பண்பாட்டை குழிதோண்டி புதைத்து வருவதுடன், சமூக அமைதியையும் சீர்குலைத்து வருகிறது.

கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அனைத்துக்கும் மதுதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. நெஞ்சைப் பிளக்கும் வகையில், 5 வயது, 6 வயது சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள்கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கொடூரங்கள் நடக்கின்றன.

நாட்டின் எதிர்கால ஒளி விளக்குகளாக பிரகாசிக்க வேண்டிய இளைஞர்களும், மாணவர்களும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு ஜெயலலிதா அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

ஈரோடு அருகே பள்ளி இறுதி ஆண்டில் பயிலும் மாணவிகள் டாÞமாக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எண்ணி கவலை அடையச் செய்கிறது. மதுக்கடைகள் இருக்கும் பகுதியில் பெண்கள் சென்றுவரவே அச்சப்படுகிற நிலைமை இருப்பதால், பொதுமக்களின் போராட்டங்கள் வெடிக்கின்றன.

மக்கள் நலனில் சிறிதும் அக்கரையற்ற தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் மூலம் அதன் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், டாÞமாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றவே கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியாளர்களுக்கு கொடிய அரக்கக் குணம் இருந்தால்தான் இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்க முடியும். இந்த அரசு ஒருபோதும் திருந்தப்போவது இல்லை என்பதற்கு இதுவே தக்க சான்று ஆகும்.

இந்த ஆண்டு பிப்ரவரி 25 இல், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மார்ச் 31க்குள் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதை நடைமுறைப்படுத்துவதற்கு ஆறுமாத காலம் அவகாசம் கேட்ட அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்தது மட்டுமின்றி, நெடுஞ்சாலைகளில் இருக்கும் 504 மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் இந்த அரசு மதிக்கத் தயாராக இல்லை. மேலும், உயர் ரக மதுவகைகளை விற்பனை செய்திட ‘எலைட்’ பார் திறக்கவும், கிராமப் புற டாÞமாக் கடைகளில் கூட, விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்களை விற்பதற்கும் ஜெயலலிதா அரசு திட்டமிட்டுள்ளது..

கொள்ளையடித்துத் திரட்டிய ஊழல் பணத்தை ஓட்டுக்கு மூன்றாயிரம் என்று ஏற்காடு இடைத்தேர்தலில் கொடுத்திருக்கிறார்கள். இனி நாடாளுமன்றத் தேர்தலிலும் ஓட்டுக்கு ஐந்தாயிரம் கொடுப்பதற்கு கோடி கோடியாக குவித்து வைத்திருக்கிறார்கள்.

மக்கள் வாழ்வையே சூறையாடி, மதுக்கடைகள் மூலம் வருமானம் திரட்டி, இலவச போதைக்கு மக்களை ஆட்சியாளர்கள் அடிமைப்படுத்துகிறார்கள்.

தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் பேராபத்தை தடுப்பதற்காகத்தான் மதுக்கடைகளை மூட வலிறுத்தி, 1,200 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டேன். வழி நெடுகிலும் பல்லாயிரக் கணக்கான தாய்மார்கள் அழுகையும், கண்ணீருமாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கதறி அழுத காட்சிகள் நெஞ்சை உருக்குகின்றன.

பேரழிவிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பும் கடமையும் தமிழ்ச் சமுகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இருக்கிறது.

மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, நிரந்தரமாக மதுக்கடைகளை மூடுவதுதான் தமிழ்நாட்டை சீரழிவிலிருந்து காப்பாற்ற ஒரே வழி என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x