Published : 09 Feb 2014 11:02 AM
Last Updated : 09 Feb 2014 11:02 AM
காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர் கள், அதற்கான விண்ணப்பத்தை சத்தியமூர்த்தி பவனில் பெற்று, வரும் 11-ம் தேதி மாலை 3 மணிக் குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞான தேசிகன், சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸார், அதற்கான விண்ணப்பப் படிவத்தை கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை வரும் 10-ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் மற்றும் 11-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரடியாகவோ அல்லது அத்தாட்சி பெற்ற நபர் மூலமாகவோ கொடுக்க வேண்டும்.
பொதுத் தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் செலுத்த வேண்டும். அனைத்து தொகுதிகளுக்கும் பெண்களுக்கான விண்ணப்பக் கட்ட ணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதுமானது. வரும் 12-ம் தேதி சென்னையில் மாநில தேர்தல் குழு கூடி, விண்ணப்பங்களை பரிசீலிக்கும். அந்தக் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியல், வரும் 13-ம் தேதி டெல்லியில் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் குழுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும். இந்தத் தகவலை மாவட்ட தலைவர்கள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT